Published : 22 Sep 2023 07:29 AM
Last Updated : 22 Sep 2023 07:29 AM

பணவீக்கத்தால் மக்களின் சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளதா? - மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

கோப்புப்படம்

புதுடெல்லி: கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்களின் சேமிப்பு குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்தது. 2021-22 நிதி ஆண்டில் மக்களின் சேமிப்பு இந்திய ஜிடிபியில் 7.2 சதவீதமாக இருந்த நிலையில் 2022-23 நிதி ஆண்டில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மக்களின் வருமானம் உயரவில்லை. இதனால், மக்கள் மாதாந்திர செலவை தங்கள் வருமானத்துக்குள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். விளைவாக, கடன் வாங்கியும், தங்களது முந்தைய சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்தும் மாதச் செலவுகளை சமாளித்து வருவதாக கூறப்படுகிறது. மக்களின் சேமிப்பு குறைவது நாட்டின் பொருளாதார போக்கில் ஒரு மோசமான அறிகுறி என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மக்களின் சேமிப்பு குறையவில்லை என்றும் மக்கள் வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் மேலும் கூறுகையில், “முந்தைய இரு நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் மக்களின் நிகர நிதி சொத்துகளின் மதிப்பு குறைந்துள்ளது. இதற்குக் காரணம், மக்கள் தற்போது வங்கிகளில் கடன் பெற்று வீடு மற்றும் வாகனம் வாங்குகின்றனர். வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் வழங்குவது அதிகரித்து இருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

வீடு சார்ந்த கடன் பிரிவில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் 2022-23 நிதி ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன. 2021-22 நிதி ஆண்டில் அது ரூ.21,400 கோடியாக இருந்தது. அந்த வகையில் கடந்த நிதி ஆண்டில் வீட்டுப் பிரிவு கடன் 11 மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல் வாகனக் கடன் 13 சதவீதம் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x