Published : 22 Sep 2023 04:00 AM
Last Updated : 22 Sep 2023 04:00 AM
புதுடெல்லி: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு விசா வழங்கும் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியதாவது: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அதன்காரணமாக, பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, கனடா குடிமக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான விசா விண்ணப்ப பரிசீலனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோகுற்றம்சாட்டியிருப்பது பாரபட்சமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. நிஜார் வழக்குதொடர்பாக இந்தியாவுடன் கனடா இதுவரை எந்தவிதமானதகவல்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை.
தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாகவே இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, கனடா அரசு பாதுகாப்பை உறுதிப்படுத்தி தனது நற்பெயரை காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ சமீபத்தில் குற்றம் சாட்டினார். அதன் தொடர்ச்சியாக, கனடா வெளியுறவுத் துறை அங்குள்ள இந்திய தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டது. கனடாவுக்கு பதிலடி தரும் வகையில், கனடா தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசுஉத்தரவிட்டது. இதன் காரணமாக,இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ளஇந்தியர்கள் கவனமாக, பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், விசா வழங்கும் சேவைகளையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT