Published : 21 Sep 2023 08:52 PM
Last Updated : 21 Sep 2023 08:52 PM
புதுடெல்லி: “தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கனடா மாறி வருகிறது” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரத்தில் இந்தியா - கனடா அரசுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பதிலடி தரும் வகையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதில் 'இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு' தொடர்பு இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மிகவும் கசப்பானதாக மாறி பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், அது குறித்த கருத்தை அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
“கனடா அரசு இவ்விவகாரத்தை கையாள்வதில் பாரபட்சமாக இயங்கி வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்துள்ள குற்றச்சாட்டுகான ஆதாரம் எதையும் இந்தியாவுடன் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால், இதனை அந்நாட்டு அரசு அரசியல் ரீதியாக முன்வைத்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக கனடா மாறி வருவதாகவும் கருதுகிறோம். பிரிவினைவாதிகள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை மேற்கொள்பவர்கள் வசிக்கும் இடமாக கனடா விளங்குவதாக கருதுகிறோம். அதனால், சர்வதேச அளவிலான நற்பெயர் குறித்து கனடாதான் கவலைகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
விசா நிறுத்தம் ஏன்? - பாதுகாப்பு சிக்கல் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதரக பணிகள் தடைபட்டுள்ளதால் அங்கு இ-விசா உட்பட விசா விண்ணப்பங்களை தற்காலிகமாக பரிசீலிக்க முடியவில்லை என்று விசா நிறுத்தம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள கனடாவின் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சினையும் பின்னணியும்: கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப் பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.
இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசின் முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று கூறினார். ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
“கனடாவில் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அபத்தமானது. இது உள்நோக்கம் கொண்டது. இதற்கு முன்பும் இதுபோனற குற்றச்சாட்டுகள் கனடா பிரதமரால் இந்திய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டன. அப்போதே அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன" என்று இந்திய வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல் அரசியல்: இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் கனடா இடையே நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனடா அரசு செவ்வாய்க்கிழமை ஓர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவும் கனடா வாழ் இந்தியர்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை நேற்று வழங்கியுள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியான வெறுப்பு குற்றச்சாட்டு வன்முறைகளை கருத்தில் கொண்டு அங்கு வாழும் இந்திய குடிமக்கள், மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். அங்கு பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் முன்னெச்சரிக்கை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கனடாவிலிருந்து இந்திய தூதரை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள சூழ்நிலையில் அங்கு அத்தியாவசியமில்லாத பயணங்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள பல குழுக்கள் நமக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளது. கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வை உறுதி செய்வதற்காக கனடா அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் எப்போதும் தொடர்பில் இருக்கும்.
விரும்பத்தகாத நிகழ்வுகளின் சூழ்நிலைகளின்போது ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் அல்லது டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணைத் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். வலைதளங்கள் மூலமாகவும் கனடாவாழ் இந்தியர்கள் உதவி கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்புலத்தில், மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது தற்காலிக நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் 10 பேரின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகத்தை தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகைப்படங்களை வெளியிட்டது என்ஐஏ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT