Published : 21 Sep 2023 12:19 PM
Last Updated : 21 Sep 2023 12:19 PM

சந்திரயான்-3 | ''விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விரைவில் விழித்தெழும்'' - விஞ்ஞானிகள் நம்பிக்கை

கோப்புப்படம்

சென்னை: நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை கணிக்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கியது. லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன. இந்நிலையில், நிலவில் பகல் பொழுது முடிந்ததால் லேண்டரும், ரோவரும் அணைக்கப்பட்டன.

இந்த சூழலில் நிலவில் பகல் பொழுது நாளை (செப்.22) தொடங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. பகல் தொடங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் -200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தாங்கும் அளவுக்கு சந்திரயான்-3 விண்கலன்கள் கட்டமைக்கப்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் விண்கலன்கள் ஸ்லீப் மோடுக்கு சென்றபோது முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்கலன்கள் விழித்தெழுமா என்பது கணிக்க முடியாதது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் 14 பூமி நாட்கள் இயங்கும் வகையில் இந்த கலன்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிலவில் ஓர் பகல்/இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம்.

லேண்டரும், ரோவரும் மீண்டும் விழித்தெழுந்தால் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் தகவல்களை இஸ்ரோ சேகரிக்கும். ஸ்லீப் மோடுக்கு செல்வதற்கு முன்பு சுமார் 40 செ.மீ உயரத்துக்கு மேல் எழுப்பப்பட்டு, 30 முதல் 40 செ.மீ தொலைவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இடம் மாற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x