Published : 20 Sep 2023 02:31 PM
Last Updated : 20 Sep 2023 02:31 PM
போபால்: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டட பிரிவுக்கான (ஓபிசி) இட ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பாஜக தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. அதில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், "மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாம் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் போனால் அது பாஜக மீது பெண்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடும்.
பிரதமர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமருக்கு கடிதம் எழுதிய நான், மசோதா தாக்கல் செய்யப்படும் வரை அமைதியாக இருந்தேன். மசோதாவில் ஓபிசியினருக்கான இடஒதுக்கிடு இல்லாததால் ஏமாற்றமடைந்தேன். பிற்படுத்த பிரிவு பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு உமாபாரதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டமியற்றும் இடங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது மிகவும் சிறந்த ஏற்பாடு. இந்த 33 சதவீதத்தில், 50 சதவீதம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டுக்கான வழிமுறை உள்ளது.
அதேபோல் மண்டல் கமிஷனால் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற மசோதா முன்பு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது (தேவ கவுடா பிரதமராக இருந்த போது), தான் உடனடியாக எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதாவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரினேன். அதன் பின்னர் அந்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது என்று பிரதமருக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவூட்டியுள்ளார்.
முன்னதாக, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் மசோதாவாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT