Published : 19 Sep 2023 12:58 PM
Last Updated : 19 Sep 2023 12:58 PM
புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்துக்கு மாறுவதற்கு முன்பாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் குழு புகைப்படம் எடுப்பதற்காக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வண்ணமயமான உடைகளில் கூடி புகைப்படம் எடுத்தனர்.
நாடாளுமன்றத்தின் நடுமுற்றத்தில் எடுக்கப்பட்ட குழுப்புகைப்படத்தில் குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களைத் தலைவருமான ஜக்தீப் தன்கரின் இருபுறம் பிரதமர் மோடியும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் அமர்ந்திருந்தனர். இவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் மக்களவைத்தலைவர் ஆதிர் ராஜன் சவுத்ரி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர் 93 வயதான சஃபிக் உர் ரஹ்மான் பராக், தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தலைவர் சரத் பவார், தேசிய காங்கிரஸ் கட்சியின் ஃபரூர் அப்துல்லா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
பெண் உறுப்பினர்கள் வண்ணமயமான சேலைகளில் வந்திருந்தனர். பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் வெள்ளை பைஜாமா குர்தாவுடன் கண்ணைக்கவரும் மிடுக்கான மேலாடை அணிந்து வந்திருந்தனர்.
காலை அமர்வின்போது பாஜக மாநிலங்களவை உறுப்பினர் நர்ஹரி ஆமின் மயங்கி விழுந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அமித் ஷா, பியூஸ் கோயில் உள்ளிட்ட சில தலைவர்கள் அவருக்கு உதவிட விரைந்து சென்றனர். தலைவர்கள் அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பின்னர் அவர் குழுப்புகைப்பட நிகழ்வில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது வரிசையின் கடையில், மணீஷ் திவாரியுடன் புகைப்படத்திற்காக நின்று கொண்டிருந்தார். மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் தங்களின் புகைப்படங்களை எடுக்கப்பட்டதால் சில உறுப்பினர்கள் தரையில் அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT