Published : 18 Sep 2023 10:26 PM
Last Updated : 18 Sep 2023 10:26 PM

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் ஆகலாம். குறிப்பாக இன்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலங்களைவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளது என்பதால் இனி மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டியது இருக்கும். திருத்தங்கள் இருப்பினும், அந்த திருத்தங்களுக்கு மாநிலங்களைவையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்படும்.

முன்னதாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x