Published : 18 Sep 2023 07:05 PM
Last Updated : 18 Sep 2023 07:05 PM

தகுதிநீக்க விவகாரம்: காலக்கெடுவை நிர்ணயிக்க மகாராஷ்டிரா சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம்  உத்தரவு

ராகுல் நார்வேகர் | கோப்புப்படம்

புதுடெல்லி: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் மே 11 உத்தரவுக்கு மரியாதை அளிக்குமாறு கூறிய உச்ச நீதிமன்றம் சிவ சேனா எம்எல்ஏக்களின் தகுதி நீக்க விவகாரத்தில் நியாயமான நேரத்துக்குள் முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி 2-ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒருங்கிணைந்த சிவசேனாவின் கொறடாவாக இருந்த எம்எல்ஏ சுனில் பிரபு, ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நார்வேகரிடம் கடிதம் வழங்கியிருந்தார். அதேபோல் ஷிண்டே தரப்பு உத்தவ் தாக்கரே அணியின் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கடிதம் வழங்கியது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஷிண்டே உள்ளிட்டவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிமன்றம், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தநிலையில் இரண்டு தரப்பு தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரின் முடிவினை விரைவு படுத்த உத்தரவிடக்கோரி சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்எல்ஏ சினில் பிரபு தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதிகள் ஜெபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சபாநாயரிடம் மே 11ம் தேதி தகுதி நீக்க வழக்கில் நியாயமான காலத்துக்குள் முடிவெடுக்க கூறியதாகவும், அதன் பின்னர் ஜூலையில் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது.

இதனிடையே சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவுத் கூறுகையில்,"உச்ச நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு இருந்தும் தகுதி நீக்க மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் நேரத்தை வீணடித்து வருகிறார். இதன் மூலம் அவர் மாநிலத்தில் அரசியலமைப்புக்கு எதிராண அரசுக்கு ஆதரவளித்து வருகிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x