Published : 18 Sep 2023 05:57 PM
Last Updated : 18 Sep 2023 05:57 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளில் மாநிலங்களவையில் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் கார்கே ஜி2 என்று மத்திய அரசு மீது தாக்குதல் தொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கும் பாஜகவின் பியூஷ் கோயலுக்கும் இடையேயும் வார்த்தை போர் நடந்தது.
இன்று (செப்.18) தொடங்கிய 5 நாள் சிறப்புக்கூட்டத்தொடரில் இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் தொடர்பாக நடந்த விவாதித்தின் போது சுமார் 65 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சிகளின் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசின் மீது தாக்குதல் தொடுத்தார். கார்கே தனது பேச்சில், "சரியான நேரத்தில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிடும். பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் நீடித்து வரும் வேலையில் நாம் ஜி2 பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
அப்போது இடைமறித்த மாநிலங்களைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "அது ஜி20 சார்" என்று கார்கேவைத் திருத்தினார். அதனைத் தொடர்ந்து, ஜி 20 உச்சி மாநாட்டின் லோகோவை சுட்டிக்காட்டிப் பேசிய எதிர்க்கட்சிகளின் தலைவர், இல்லை, பூஜ்ஜியம் தாமரையில் மறைந்து விட்டது. ஏனெனில் பூஜ்ஜியம் தாமரைப் போல் தெரிந்தது" என்றார். இது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சிரிப்பை வரவழைத்தது.
கார்கேவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சபைத் தலைவர் பியூஸ் கோயல், ஜி20 யைக் கேலி செய்யவேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான கார்கே எப்போதும் 2‘ஜி’மட்டும் தான் பார்க்கிறார். ஒன் ஜி மற்றும் சன் ஜி என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை குறிப்பிட்டுப் பேசினார்.
இதனால் வெளிப்படையாகவே எரிச்சலடைந்த கார்கே, "நாடு என்று வரும் போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். நீங்கள் மட்டும் தேசபக்தர்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் மக்களே தேசபக்தர்கள். அவர்கள் தங்களின் உயிரினை தியாகம் செய்து இறந்தார்கள். அதன் பலனை நீங்கள் அறுவடை செய்துவிட்டு எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்றார்.
மேலும், சிறப்புக்கூட்டத்தொடர் நடத்தி புதிய நாடாளுமன்றத்துக்கு போகும் இந்த வேளையில், ஆம் ஆத்மி உறுப்பினர்களான சஞ்சய் சிங் மற்றும் ராகவ் சந்தா ஆகிய இருவரின் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு அவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT