Published : 18 Sep 2023 04:27 AM
Last Updated : 18 Sep 2023 04:27 AM

கைவினை கலைஞர்கள் பயன்பெற ரூ.13,000 கோடியில் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டம் தொடக்கம்: டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடக்கத்தின் போது பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடு முழுவதும் 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.13,000 கோடியிலான ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30 லட்சம் குடும்பங்கள் அடுத்த 5 ஆண்டுகாலம் பயன்பெறும்.

ஸ்ரீவிஸ்வகர்மா ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரூ.13,000 கோடியிலான ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள தச்சுத் தொழிலாளி, படகு செய்பவர், ஆயுதம் செய்பவர், இரும்பு கொல்லர், கூடை, மிதியடி, துடைப்பம், கயிறு திரிப்பவர், பாரம்பரிய மொம்மை தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், காலணி கைவினைஞர், சுத்தி மற்றும் சாதனங்கள் தயாரிப்பவர், சிற்பி, கல் உடைப்பவர், கொத்தனார், முடி திருத்துபவர், பூமாலை தயாரிப்பவர், துணி துவைப்பவர் , துணி தைப்பவர், மீன் வலை செய்பவர் என 18 வகையான பாரம்பரிய கைவினை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் சுமார் 30 லட்சம் குடும்பங்கள் அடுத்த 5 ஆண்டுகாலம் பயன்பெறும்.

இத்திட்டத்தின்கீழ் மேற்கண்ட கைவினை கலைஞர்களுக்கு ரூ.3 லட்சம் வரை ஈட்டுறுதி இல்லாமல் கடன் வழங்கப்படும். இதில் முதல் தவணையாக அளிக்கப்படும் ரூ.1 லட்சத்தை 18 மாதத்துக்குள் திருப்பி செலுத்தவேண்டும். 2-வது தவணையில் பெறப்படும் ரூ.2 லட்சத்தை 30 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். 5 சதவீத சலுகை வட்டியில் இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் உத்தரவாத கட்டணத்தை மத்திய அரசு ஏற்கும்.

கைவினை கலைஞர்களுக்கு 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை40 அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழ், அடையாள அட்டைவழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், 15 நாட்களுக்கு அளிக்கப்படும் மேம்பட்ட பயிற்சியில் இணையலாம். அப்போது அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித் தொகை அளிக்கப்படும்.

ரூ.15 ஆயிரம் உதவித்தொகை: அத்துடன், கைவினை கலைஞர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். சுய வேலைவாய்ப்பில் ஈடுபடும் கலைஞர்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம். பயனாளி 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் தொடக்க விழா டெல்லி துவாரகாவில் நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசியதாவது:

நமது நாட்டில், நம்மை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் விஸ்வகர்மா மக்கள்தான் உருவாக்கியுள்ளனர். நம்மை சுற்றி, நம்மோடு வாழ்ந்து வரும் மிகவும் திறமைவாய்ந்த கைவினை கலைஞர்கள்தான்நமது பொருளாதாரத்தை தற்சார்பு உடையதாக ஆக்கினர். அதனால்தான் 500 ஆண்டுகளுக்கு முன்பே, சிறந்த பொருளாதாரத்துடன் இந்தியா முன்னணி நாடாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் தேவைப்பட்டன.

கைவினை கலைஞர்களை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், அவர்களது திறன்களைஉயர்த்தவும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், பொருளாதார வளத்தில் அவர்களது தீவிர பங்களிப்பை அங்கீகரிக்கவும் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கலைஞர்களுக்கு தேவையான நிதியுதவி, பயிற்சி, வாய்ப்புகளை வழங்குவதும், அவர்களது பாரம்பரிய தொழில்களை பாதுகாத்து முன்னேற்றம் ஏற்படுத்துவதை உறுதி செய்வதும்தான் இத்திட்டத்தின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x