Published : 18 Sep 2023 05:11 AM
Last Updated : 18 Sep 2023 05:11 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொது மக்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லியில் ஆரஞ்சு லைன் மெட்ரோவில் நியூ டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா செக்டர் 21 ரயில் நிலையம் வரை 22.7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இது டெல்லி எர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் துவாரகா செக்டர் 21 ரயில் நிலையத்தில் இருந்து யஷோ பூமி துவாரகா செக்டர் 25 ரயில் நிலையம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு வழித்தடம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
துவாரகா செக்டர் 21 ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து யஷோ பூமி துவாரகா செக்டர் 25 வரை அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது மெட்ரோ பயணிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். சிறு குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். பிரதமர் மோடியின் 73-வது பிறந்தநாளை ஒட்டி, பயணிகள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஒரு இளம்பெண், சம்ஸ்கிருத பாடலை பாடி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இவை தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
ரயிலின் வேகம் அதிகரிப்பு: டெல்லி எர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் மெட்ரோ ரயிலின் வேகம் 100 கி.மீ. ஆகவும் கடந்த ஜூனில் 110 கி.மீ. ஆகவும் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி எர்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களின் வேகம் நேற்று 120 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி அதிருப்தி: மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்க டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கூறும்போது, “அண்மையில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் உலகம் ஒரு குடும்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் டெல்லி மெட்ரோ ரயில் விழாவில் பங்கேற்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அவர் அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்" என்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் அதிஷி கூறும்போது, “டெல்லி மெட்ரோ சேவை 2 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கப்பட்டு உள்ளது. இதில் டெல்லி அரசின் பங்களிப்பும் இருக்கிறது. ஆனால் விழாவில் பங்கேற்க முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது பிரதமர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது" என்று விமர்சித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT