Last Updated : 17 Sep, 2023 06:56 PM

2  

Published : 17 Sep 2023 06:56 PM
Last Updated : 17 Sep 2023 06:56 PM

பாஜகவில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக ரூ. 5 கோடி மோசடி செய்த பெண் நிர்வாகி உட்பட 6 பேர் கைது

சைத்ரா குந்தாபுரா

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்துத்துவ‌ அமைப்பின் பெண் நிர்வாகி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளன‌ர். இதில் மடாதிபதி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் உள்ளிட்டோர் சிக்கியுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூரை சேர்ந்தவர் கோவிந்த் பாபு பூஜாரி (44). தொழிலதிபரான இவர் பெங்களூருவில் உணவகம் மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். பாஜக ஆதரவாளரான கோவிந்த் பாபு பூஜாரி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். இந்நிலையில் அவருக்கு உடுப்பியை சேர்ந்த இந்து ஜகர்ன வேதிகே அமைப்பின் நிர்வாகியும், வலதுசாரி பேச்சாளருமான‌ சைத்ரா குந்தாபுராவை அவரது நண்பர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான சைத்ரா குந்தாபுரா, தன‌க்கு ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிக‌ள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கோவிந்த் பாபு பூஜாரியிடம் கூறியுள்ளார்.

மேலும் அவர் பாஜக மேலிடத் தலைவர்கள் சிலருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தால் சீட் வாங்கலாம் என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக மடாதிபதிகள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆகியோரிடம் சிபாரிசு கடிதம் பெற வேண்டும் எனக்கூறி உடுப்பி பாஜக இளைஞர் அணி செயலாளர் ககன் கடூர், மஹா சமஸ்தானா மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ சுவாமி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் ரமேஷ் நாயக், பாஜக ஆதரவாளர்கள் தன்ராஜ், ஸ்ரீகந்தா நாயக், பிரஷாந்த் பைந்தூர் ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கூட்டாக சதி: இதனிடையே சைத்ரா குந்தாப்புரா பாஜகவில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாகக்கூறி முதலில் ரூ.50 லட்சமும், அடுத்ததாக ரூ.1.5 கோடியும் பணம் வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அபினவ ஹலஸ்ரீ சுவாமி, ரமேஷ் நாயக் ஆகியோர் சிபாரிசு செய்வதற்காக கோவிந்த் பாபு பூஜாரியிடம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை 4 தவணையாக ரூ.3 கோடி வாங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் கோவிந்த் பாபு பூஜாரியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் தனது பணத்தை திருப்பி தருமாறு சைத்ரா குந்தாபுராவிடம் கேட்டார். அப்போது பணத்தை திருப்பி தர மறுத்த அவர், கோவிந்த் பாபு பூஜாரியை ரவுடிகளை வைத்து கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை: இதையடுத்து பாதிக்கப்பட்ட கோவிந்த் பாபு பூஜாரி கடந்த 8-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பண்டே பாளையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இவ்வழக்கை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றினர். இதை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சைத்ரா குந்தாபுரா, ககன் கடூர், விஷ்வநாத் ஜி, ரமேஷ் நாயக், தன்ராஜ், ஸ்ரீகந்தா நாயக் ஆகிய 6 பேரை நேற்று முன் தினம் கைது செய்தனர். கைதான 6 பேரும் பெங்களூரு மாநகர கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது நீதிபதி, வருகிற 23ம் தேதி வரை 6 பேரையும் குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து போலீஸார் 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டும் மறுப்பும்: அப்போது சைத்ரா குந்தாபுரா, “இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மடாதிபதி அபினவ ஹலஸ்ரீ சுவாமி கைதானால் பெரிய பாஜக தலைவர்கள் சிக்குவார்கள். இதில் என்னை மட்டும் சிக்க வைக்க சதி நடக்கிறது” என கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “சைத்ரா குந்தாப்புரா மோசடியில் பாஜகவுக்கு தொடர்பு இல்லை. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜக, மடாதிபதி ஆகியோரின் பெயரில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக ரூ.5 கோடி ஏமாற்றிய விவகாரம் கர்நாடக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x