Published : 17 Sep 2023 03:07 PM
Last Updated : 17 Sep 2023 03:07 PM

ரூ.13,000 கோடியில் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்: கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் விஸ்வகர்மாஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைத்தார்.

இந்த திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், "பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொது சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

கைவினை கலைஞர்கள்: இந்த திட்டத்தின் மூலம் குரு - சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்" என்று தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி: டெல்லி யஷோபூமி துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில், நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் அவர் பயணித்தார். அப்போது, அதே ரயிலில் பயணித்த சக பயணிகள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அவரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கண்காட்சி மையம் திறப்பு: டெல்லி துவாரகாவில் யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரக்கூடிய மாநாட்டு மையம், 15 மாநாட்டு அறைகள், பெரிய அளவிலான அரங்குகள், 13 கூட்ட அரங்குகள் ஆகியவற்றை இந்த மையம் கொண்டுள்ளது. ரூ. 5,400 கோடி மதிப்பில் 8.9 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு சிறு குறு தொழிலாளர்களின் ஸ்டால்களை பார்வையிட்டு, அவர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x