Published : 17 Sep 2023 04:21 AM
Last Updated : 17 Sep 2023 04:21 AM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடக்கம்: அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை (செப். 18) தொடங்கும் நிலையில், மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப். 18 முதல் 22-ம் தேதி வரை5 நாட்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, நாடாளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்தமசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்திலும், மற்ற 4 நாள் கூட்டங்கள் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்கும் எனத் தெரிகிறது. மேலும், டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறித்து, இந்தக் கூட்டத்தில் பாஜக தரப்பு பேசும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x