Published : 17 Sep 2023 06:47 AM
Last Updated : 17 Sep 2023 06:47 AM

நிறைவேறியது ‘தேசிய கவுரவ காப்பு மசோதா’ - சீர்திருத்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும்

(தேசிய கொடி எரிப்பு, காந்தி சித்திரம், படம் எரிப்பு, சிலை உடைப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில் கடந்த 1957-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மதராஸ் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தின் தொடர்ச்சி..)

நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம்: இந்த திருத்தம் இந்த மசோதாவுக்குப் பொருத்தமற்றது, உறுப்பினர் கோரும் அம்சம் ஏற்கெனவே தேசிய அடையாள (காப்பு) சட்டத்தில் இடம் பெற்றுவிட்டது என்றார். அதன் பிறகு அவர் கொண்டு வந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டு, ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.

ஐந்தாவது உட்கூறு (அரசமைப்புச் சட்டத்தை எரிப்பது வன்செயலாகக் கருதப்படும்), ஆறாவது உட்கூறு, ஏழாவது உட்கூறு ஆகியவை விவாதங்களின்றி ஏற்கப்பட்டன. அந்த சட்டத்துக்கான முதலாவது உட்கூறு (சட்டத் தலைப்பு), முகவுரை ஆகியவற்றையும் அவை ஏற்றது. இந்த மசோதாவை அவையின் ஒப்புதலுக்கு முன்மொழிந்து பேசிய உள்துறை அமைச்சர் பக்தவத்சலம், இப்படியொரு மசாதோவைக் கொண்டு வந்ததற்காக அரசை யாரும் குறை கூறக் கூடாது, இப்போதுள்ள சட்டங்களால் எதிர்கொள்ள முடியாத குற்றங்களுக்காகத்தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

புதிய சட்டத்தை அமல்படுத்தும்படியான நிலைமை ஏற்பட்டுவிடாது என்று நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் குறிப்பிட்டார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை யாரும் எரித்துவிடாதபடி அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். இவை எல்லாம் தமிழ்நாட்டின் கலாச்சாரம் அல்ல. ராமசாமி நாயக்கர் மனமாற்றம் அடைந்து தன் இயக்கத்துக்கு தான் கூறிய வழிமுறைகளால், சமூக ஒற்றுமையும் ஏற்படாது, சாதி வேறுபாடு களும் மறைந்து விடாது என்பதை உணர்வார் என்று நம்புகிறேன். இந்த மசோதாவின்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் இதை அரசின் அடக்குமுறையாக மக்கள் நினைத்துவிடாதபடிக்கு அரசு நடந்துகொள்ள வேண்டும்.

திமுக தலைவர் வேண்டுகோள்

திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை: இந்த சட்டப்படி அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிட வேண்டாம் என்று அரசை கேட்டுக்கொள் கிறேன். திமுகவின் சுயரூபம் என்ன என்று இன்று தெரிந்து கொண்டேன் என்று அவை முன்னவர் (நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம்) பேசியது தவறு. ஆவணங்களை எரிப்பது என்ற போராட்ட வழிமுறை புதிது அல்ல. மதச் சீர்திருத்தக்காரர்கள் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை ஐரோப்பாவில் எரித்திருப்பதை நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம்.

திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் பிராமணர்களை நடத்திய விதம் எப்படிப்பட்டது என்று அவை முன்னவர் அறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுகவில் பிராமணர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். வெறுப்போ, வன்செயல்களோ இல்லாமல் பிராமணீயத்தின் தீமைகளை நாகரிகமான முறையில் நீக்கிவிட முடியும் என்று திமுக கருதுகிறது. ராமசாமி நாயக்கர் முன்னாள் காங்கிரஸ்காரர், உங்களோடு தோளோடு தோள் நின்று செயல்பட்டவர் என்பதை அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எனவே எந்த சிரமும் இன்றி முதலமைச்சரால் அவரை அணுகி, இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா குறித்து நாம் சூடுபறக்க விவாதிக்கையில், முதலமைச்சர் காமராஜர் இவ்விடத்தில் இருந்து துக்கப் படாமல் வேறு இடத்தில் இருந்து மனதுக்கு சாந்தி ஏற்படுத்திக் கொள்கிறார் என்று கருதுகிறேன்.

வி.கே.ராமசாமி முதலியார்: இந்த மசோதா தரும் அதிகாரத்தை அரசு பயன் படுத்தும்படியான சூழ்நிலை ஏற்பட்டுவிடாது என்று நம்புகிறேன்.

அவை முன்னவர், நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம்: புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் தருணம் ஏற்பட்டுவிடாது என்று நம்புவதாக திமுக தலைவரும், மாநில உள்துறை அமைச்சரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், அந்த உணர்வில் நானும் பங்கேற்கிறேன். தேர்தலில் சில பிராமண வேட்பாளர்களை திமுக ஆதரித்திருக்கிறது. பிராமணர்களை இவ்வளவு வன்மையாக எதிர்க்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூட இங்கும் அங்குமாக சில பிராமணர்களை ஆதரித்தது தனக்குத் தெரியும் என்று அவைத் தலைவரும் குறிப்பிட்டார். இவையெல்லாம் அந்த சமூகத்தவர் மீது அவ்விரு இயக்கங் களுக்குமான கண்ணோட்டம் முற்றிலும் மாறிவிட்டது என்பதற்கான அடையாளங்கள் அல்ல. புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அனைவருடைய விருப்பமாகவும் இருக்க முடியும்.

“சீர்திருத்தங்களைக் கொண்டுவர வன்முறையை ஆயுதமாக கையாள்வது கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு வகுப்பாரை வெறுப்பதன் மூலம் சாதி அமைப்பு முறையை ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுகின்றனர். அது தவறான கண்ணோட்டம், அதற்கு மாறாக சாதிய முறை மேலும் ஆழமாகத்தான் வேர்கொண்டு வளரும். சாதிப் பிரிவினைகளும் அமைப்பு முறையும் தொடர்வதை காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் மாநில அரசும் விரும்பவில்லை. அதை ஒழிக்க அனைவரும் அவரவர் பாணியில் தொடர்ந்து முயற்சிகள் செய்கின்றனர். சாதி முறையைத் தொடர்ந்து தக்கவைக்க மாநில அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன். நான் இந்த வாக்குறுதியை வழங்கிய பிறகு ஒரு சாராருக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் முயற்சிகள் தொடராது என்று நம்புகிறேன்.

சட்டம் ஏன் அவசியமானது: “இப்படியொரு சட்டமியற்றும் தேவைஏற்பட்டுவிட்டது என்பது இந்த மாநிலத்துக்கோ, மாநில மக்களுக்கோ பெருமை தரக்கூடிய விஷயம் அல்ல. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார், வெவ்வேறு அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார், நாட்டுக்காகவும் சமுதாயத்துக்காகவும் நிறைய உழைத்திருக்கிறார். மூத்த தலைவர் என்ற வகையில் மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தன்னுடைய நல்லாசிகளை வழங்கி, நாட்டின் நன்மைக்கான செயல்கள் நடைபெறுவதற்கு உதவ வேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் இயற்றப்பட்டுவிட்டது, ஆனால் அது பயன்பாட்டுக்கு வராமலே போவதை உறுதி செய்வது அனைவருடைய கைகளிலும் இருக்கிறது”.

உள்துறை அமைச்சர் பக்தவத்சலம்: இந்த சட்டம் எந்தவொரு தனி நபருக்கும் எதிரானது அல்ல. இதை ஒரு தடுப்பு நடவடிக்கை என்றுதான் சொல்வேன். திமுக தலைவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு சமூகத்தில் சிலரை மட்டும் ஆதரிப்பது போதாது. திமுகவின் கொள்கைகளில் அடிப்படையான மாற்றம் அவசியம். மாறியிருப்பதாக கூறப்பட்டது, அதை நான் ஏற்கிறேன். முதலமைச்சர் அவையில் இல்லை என்று ஓர் உறுப்பினர் குறிப்பிட்டார், முதலமைச்சர் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார், இன்னும் தலைநகருக்குத் திரும்பவில்லை.

பிறகு இந்த மசோதாவை அவை ஏற்ப தற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்புக்கு விட்டு, பிறகு நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

புதிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் அனைவருடைய விருப்பமாகவும்இருக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x