Published : 17 Sep 2023 07:18 AM
Last Updated : 17 Sep 2023 07:18 AM
ஹைதராபாத்: நாட்டில் அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
கார்கே தலைமையில் முதன்முறையாக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஓட்டலில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் இந்த செயற்குழு கூட்டம் நடை பெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் வருகை தந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் டாக்ரே ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மாலையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
இதில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மணிப்பூர் மாநில கலவரங்களை தடுக்கவும், மீண்டும் அமைதியை நிலை நாட்டவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தவறி விட்டது. மணிப்பூரில் இப்போது கூட கலவரம் ஓயவில்லை. மணிப்பூர் கலவரங்களை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
5 டிரில்லியன் பொருளாதாரம், பாரத், புதிய இந்தியா, அம்ருத்கால், இந்தியா உலகிலேயே 3-வதுமிகப்பெரிய வணிக நாடு எனும் பிம்பங்கள் எல்லாம் வெறும் நாடகத்தனமான பேச்சுகள். நாட்டின் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும், பின்தங்கிய வர்க்கத்தினரின் அடிப்படை உரிமைக்கும் காங்கிரஸ் எப்போதுமே கட்டுப்பட்டு உள்ளது.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்கள் குரலே காங்கிரஸின் குரலாக ஒலிக்கும். இன்று நாட்டின் எதிர்கால நலனுக்காக 27 கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே கோட்டில் பயணிக்கின்றன.வரப்போகும் 5 மாநில சட்டப் பேரவை, மக்களவைத் தேர்தல்கள் குறித்து நாளை (இன்று) விரிவாக விவாதிக்கவுள்ளோம். இவ்வாறு கார்கே பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு காங்கிரஸ் எதிராக உள்ளது. அதனை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அமல்படுத்தினால், மாநில அரசுகளின் உரிமைகளை ஒடுக்குவது போலாகிவிடும். இதனை அமல் படுத்த வேண்டுமானால், மத்தியஅரசுக்கு போதிய பலம் தேவை.அது அவர்களிடம் இல்லை. ஆதலால் இச்சட்டம் நிறை வேறாது’’ என்றார்.
இக்கூட்டத்தில் கேரள மாநில முன்னாள் முதல்வர் மறைந்த உம்மன் சாண்டி, மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இமாச்சல பிரதேசத்தில் நடந்த இயற்கை பேரழிவை, தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் முன்னாள் அமைச்சர் தும்மல நாகேஸ்வர ராவ், அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், இன்று ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தனதுகட்சியை கலைத்து விட்டு காங்கிரஸுடன் இணைய உள்ளார் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT