Published : 16 Sep 2023 12:28 PM
Last Updated : 16 Sep 2023 12:28 PM
புதுடெல்லி: "தேர்தலுக்கு இன்னும் 6 முதல் 9 மாதங்கள் இருக்கின்றன. ஆனால் அரசு அதனை முன்கூட்டியே நடத்தலாம்" என்று திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைக்கப்பட்ட காங்ரகிரஸ் கட்சியின் செயற்குழுவின் முதல் கூட்டம் விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள தெலங்கானாவில் இன்று (செப்.16) நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் வியூகத்தை வகுப்பது. இண்டியா கூட்டணி குறித்த விவாதம் கூட்டத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கூறுகையில், "நிச்சயமாக நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் மாற்றங்கள், தேர்தலுக்கான வெற்றி வாய்ப்புகள், இண்டியா கூட்டணியில் எங்களைப் பிரதிநிதித்துவம் ஆகியவை முக்கியமான விவாதத்துக்கானவையாக இருக்கும். வழக்கமான காலப்படி தேர்தலுக்கு இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அரசு தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். இப்படி இருந்தாலும் நாங்கள் விரைவாக தயாராக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழக் கூட்டம்: முன்னதாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு முன்பு பேசிய வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்,"காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முதல்முறையாக ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. நாளை (சனிக்கிழமை) 2.30 மணி அளவில் செயற்குழு கூடுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் 6 பேர் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளனர். எங்கள் கட்சியின் 4 முதல்வர்கள் உள்பட 84 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நாங்கள் விவாதிக்க இருக்கிறோம். தெலங்கானா உள்ளிட்ட இந்த 5 மாநிலங்களிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
தெலங்கானாவில் நடக்க இருக்கும் இந்தக்கூட்டம், பாஜக மற்றும் கேசிஆரின் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு (பிஎஸ்ஆர்) சேர்ந்து இணைத்து விடப்பட்ட செய்தியாகும். கேசிஆரின் பிஎஸ்ஆர் கட்சியை பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் அழைக்கிறது.
நீண்ட காலத்துக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியமான கூட்டம் டெல்லிக்கு வெளியே நடக்கிறது. தெலங்கானா தேர்தலை தீவிரமாக கண்காணித்து வரும் காங்கிரஸ் கட்சி அங்கு தெலங்கானா ஒருங்கிணைப்பு தினத்தில் செப்.17-ம் தேதி ஒரு பேரணியை நடத்த இருக்கிறது. அதில் ஆறு வாக்குறுதிகளை அறிவிக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்தச் செயற்குழுக் கூட்டம் தெலங்கானா அரசியலில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்று மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,"தெலங்கானா மக்களுக்காக நாங்கள் ஆறு வாக்குறுதிகளை அளிக்க இருக்கிறோம். தேர்தல் வரும் போது தெலங்கானா மக்கள் அவர்களுக்கு சேவை செய்வதற்கான உத்தரவினை வழங்குவார்கள்.
மக்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மோடி அரசும் கேசிஆரின் அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை, நரேந்திர மோடி டெல்லியில் இருக்கிறார். கேசிஆர் ஐதராபாத்தில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஎஸ்ஆர் ஆகியவைகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு தெலங்கானா தேர்தல் ஒரு முக்கியமான சோதனையாக இருக்கும்.
காங்கிரஸ் செயற்குழு கடந்த மாதத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவால் மறுசீரமைக்கப்பட்டது. அதில் சில ஆச்சரியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தக் குழுவில் சசிதரூர், சச்சின் பைலட், கவுரவ் கோகாய் போன்றவர்களை குழுவில் இணைத்தார். இந்தச் செயற்குழுவில் 39 வழக்கமான உறுப்பினர்கள், 32 நிரந்தர அழைப்பாளர்கள், 13 சிறப்பு அழைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT