Published : 16 Sep 2023 05:36 AM
Last Updated : 16 Sep 2023 05:36 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்து புதிய இந்திய வரைபடம் வெளியிட்ட அமீரகம்: ஜி20 மாநாட்டின் வெற்றியால் பலப்பட்ட உறவு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின் கீழ் அந்தப் பகுதி இருந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் ஒரு நாள் காஷ்மீருடன் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கேற்ப பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலப்பரப்பையும் சேர்த்து புதிய இந்திய வரைபடத்தை ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் முழு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியாக காட்டப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம்தேதிகளில் நடைபெற்றது. அப்போது, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளை இந்தியாவுடன் கடல் மற்றும் ரயில் போக்குவரத்தில் இணைக்கும் மிகப்பெரிய திட்டத்துக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் மோடி, சவுதி அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய 3 பேரும் ஒன்றாக கைகுலுக்கிய வீடியோ வைரலானது.

முன்னதாக ஜி20 நாடுகளின் சுற்றுலா துறை பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு காஷ்மீரில் நடைபெற்றது. அப்போது இந்தியாவுக்கு எதிராகபொய் செய்திகளை பாகிஸ்தான் பரப்பியது. எனினும், இந்தியாவுடன் சவுதி தற்போது உறவை பலப்படுத்தி உள்ளது. அமெரிக்காவும் இணைந்திருப்பதால் இந்த புதிய இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் காஷ்மீர் விஷயத்தில் பல இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தன. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடன் உறவை பலப்படுத்திக் கொள்ள இஸ்லாமிய நாடுகளும் தயாராகிவிட்டன என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமீரக துணைப் பிரதமர் சயீப் பின் ஜாயத் அல் நயான் வெளியிட்ட புதிய இந்திய வரைபடத்தில், அக்சய் சின் பகுதியும் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் - ஐரோப்பிய நாடுகள் - இந்தியா இடையே பொருளாதார வழித்தடம் தொடர்பான திட்டத்தை அறிவித்த பிறகு ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தைத்தான் அமீரக துணை பிரதமர் சயீப் வெளியிட்டதாக கூறுகின்றனர்.

அமீரகம் வெளியிட்ட இந்திய வரைபடத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், ‘‘முழு ஜம்மு காஷ்மீரையும் இந்தியாவின் பகுதியாக காட்டும் வரைபடம் ஏற்றுக் கொள்ள முடியாதது. அந்த வரைபடம் தவறானது. காஷ்மீரின் ஒரு பகுதி சர்ச்சைக்குரிய இடமாக ஐ.நா.வும் கூறியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x