Published : 15 Sep 2023 04:20 PM
Last Updated : 15 Sep 2023 04:20 PM
அனந்தநாக்: ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் 3-வது நாளை எட்டியுள்ள நிலையில், தீவிரவாதிகள் பதுங்கிடத்தைக் கண்டறிய ட்ரோன்களை ராணுவம் களமிறக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது ட்ரோன் தகவல்களின்படி தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியும் வருகிறது
கர்னல், மேஜர், டிஎஸ்பி, ராணுவ வீரர் உயிரிழப்பு - இந்த என்கவுன்ட்டரில் இதுவரை ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப் பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் மன்ப்ரீத் சிங், படை கமாண்டர் மேஜர் ஆஷிஷ், காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான்காவதாக காயமடைந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்னல் மன்ப்ரீத் சிங், மேஜர் அஷிஷ் டோன்சக் ஆகியோரின் உடல்கள் பானிப்பட்டுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. டிஎஸ்பி ஹுமாயுன் பட் உடல் நேற்று (வியாழக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு மனைவியும், 3 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர். முன்னதாக மூவரின் சடலங்களும் ஸ்ரீநகரில் ராணுவத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்த தேடுதல் வேட்டையின்போது ராணுவ வீரர் ஒருவர் மாயமாகியுள்ளார். இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீவிரவாத சதியின் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் சார்பு இயக்கமான டிஆர்எஃப் (The Resistance Front) ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT