Published : 15 Sep 2023 01:32 PM
Last Updated : 15 Sep 2023 01:32 PM
உதய்பூர்: பெட்ரோல் மீதான கலால் வரியை 17 மாதங்களில் மத்திய அரசு இரண்டு முறை குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களின் சிரமத்தைப் போக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த 17 மாதங்களில் பெட்ரோல் மீதான கலால் வரியை இரண்டு முறை குறைத்துள்ளது. எனினும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மாநில அரசுகள் வாட் வரியைக் கூட்டி விட்டன. இதன் காரணமாக, ராஜஸ்தானில் பெட்ரோல் விலை அருகில் உள்ள மாநிலங்களைவிட லிட்டருக்கு ரூ. 12 முதல் ரூ. 15 வரை அதிகமாக விற்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால், மக்கள் எல்லை தாண்டி அருகில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்குகிறார்கள்.
ஊழல், சட்ட விரோதமாக சுரங்கங்களை நடத்துவது, கும்பல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் ராஜஸ்தான் மாநிலம் தற்போது நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அன்பு ஊற்றெடுக்கும் சுரங்கத்தைத் திறக்கப் போவதாகக் கூறிய எதிர்க்கட்சிகள், தற்போது வெறுப்பை விற்கும் மாபெரும் வணிக வளாகத்தைக் கட்டி உள்ளனர். INDI கூட்டணியில் உள்ளவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். வெறுப்பின் தூதுவரான ராகுல் காந்தி, அதற்கான அனுமதியை அவர்களுக்குக் கொடுத்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானின் துடு நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "எதிர்கட்சிகளின் கூட்டணி INDIA கூட்டணி அல்ல; அது INDI கூட்டணி. ஏனெனில், INDIA கூட்டணி என கூறினால், கூட்டணி என்ற வார்த்தையை இரண்டு முறை கூறுவதாக ஆகிவிடும். எனவே, அது INDI கூட்டணிதான். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சனாதன தர்மத்தை ஒரு நோய் என்கிறார். அவரது இந்த கருத்து குறித்து காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும் பதில் சொல்ல வேண்டும்" என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT