Published : 15 Sep 2023 07:33 AM
Last Updated : 15 Sep 2023 07:33 AM

நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கேரள மாநிலத்தில் பள்ளிகள் மூடல்

கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். ஒன்பது வயது சிறுவன் உட்பட ஏனைய மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளதையடுத்து பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நிபா வைரஸை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கேரள அரசு 19 முக்கிய குழுக்களை அமைத்துள்ளது.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இதுகுறித்து கூறியதாவது: 24 வயதான சுகாதாரப் பணியாளர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 706 பேரில் 77 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவிலும், 153 சுகாதாரப் பணியாளர்கள் குறைந்த ஆபத்துள்ள பிரிவிலும், 13 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் உள்ளனர். அவர்களுக்கு லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களில் 9 வயது சிறுவனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நிபா வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஏழு கிராம பஞ்சாயத்துகளான ஆத்தஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூர், குட்டியாடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிழும்பாறை ஆகியவை தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளூர் தன்னார்வ குழுக்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

நிபா வைரஸ் தொற்றின் மையமான கோழிக்கோட்டில் உள்ளஅனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பான அறிவிப்பை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா தனது முகநூல் பதிவில் வெளியிட்டுள்ளார். கேரளாவில் பரவும்நிபா வைரஸ் வங்கதேச வகையைசேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x