Published : 15 Sep 2023 09:14 AM
Last Updated : 15 Sep 2023 09:14 AM
போபால்: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி, சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், மத்திய பிரதேசத்தின் சாகர் பகுதி, பினா நகரில் பெட்ரோ கெமிக்கல் ஆலையை தொடங்க உள்ளது. இந்த ஆலையின் பூமி பூஜை விழா பினா பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆலைக்குஅடிக்கல் நாட்டினார். அதோடுமத்திய பிரதேசத்தின் ரட்லத்தில் தொழிற்பூங்கா, இந்தூரில் இரு தகவல் தொழில்நுட்ப பூங்கா உட்பட ரூ.50,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மத்திய பிரதேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட உள்ளது. இந்த தொகை பல மாநிலங்களின் முழு ஆண்டுக்கான பட்ஜெட் ஆகும்.
பினா சுத்திகரிப்பு ஆலை செயல்பாட்டுக்கு வரும்போது, பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் உற்பத்தியில் இந்தியாதன்னிறைவை எட்டும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஊழல்அறவே ஒழிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் மத்தியப் பிரதேசம் புதிய உச்சங்களைத் தொடும்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின்மதிப்பு பன்மடங்கு உயர்ந்து வருகிறது. ஆனால் சில கட்சிகள் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில்ஈடுபட்டு வருகின்றன. சில எதிர்க்கட்சிகள் இணைந்து இண்டியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி ஆணவ கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இந்தியாவின் பல்லாயிரம் ஆண்டு கலாச்சாரத்தை, இந்தியர்களின் நம்பிக்கையை அழிக்க இண்டியா கூட்டணி ரகசியமாக கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. சனாதன தர்மத்தை அழிக்க இந்த கூட்டணி விரும்புகிறது. தேச தந்தை காந்தியடிகள் தனது வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை கடைப்பிடித்தார். அவரது உயிர் பிரியும்போதுகூட, ‘ஹே ராம்' என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தர், லோகமான்ய திலகர் உள்ளிட்டோர் சனாதன தர்மத்தை கண்டிப்புடன் பின்பற்றினர். தீண்டாமைக்கு எதிரான இயக்கத்துக்கு சனாதன தர்மமே ஊக்கம் அளித்தது. ஆனால் இண்டியா கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க முயற்சி செய்கிறது.
மத்திய அரசு சாதனை: பல்லாயிரம் ஆண்டுகளாக சனாதன தர்மம் இந்தியாவை ஒன்றிணைத்து வருகிறது. ஆனால் இண்டியா கூட்டணி, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது. சனாதன தர்மத்தை பின்பற்றுவோர், தேசத்தை நேசிப்பவர்கள் இத்தகைய சக்திகளை எதிர்த்து போரிடவேண்டும்.
கரோனா காலத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. ஜன்தன் வங்கிக் கணக்கு, ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு, ஏழை பெண்களுக்கு உஜ்வாலா சமையல் காஸ் இணைப்பு, குறு, சிறு விவசாயிகளுக்கு நிதியுதவி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளோம். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது. ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமூக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசுசெயல்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...