Published : 14 Sep 2023 06:32 AM
Last Updated : 14 Sep 2023 06:32 AM
புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை 3 ஆண்டுகளுக்குள் (2026) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக எண்ணெய்சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 75 லட்சம் பயனாளிகளையும் சேர்த்தால் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒட்டுமொத்த இலவச சமையல்எரிவாயு இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும்.
மேலும், ஜி20 உச்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக்காட்டிய பிரதமர் மோடியை பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்நிறைவேற்றியது. ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது நமது நாட்டுக்கு பெருமைஅளிக்கும் விஷயம் என்று அமைச்சரவை குறிப்பிட்டது.
கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், ஆப்ரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர்ப்பது மற்றும் சர்வதேச உயிரி எரிபொருள் சங்கம் அறிமுகம் உட்பட பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
எனவே, இந்த மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்தியது நம் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும். இதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், 3-வது கட்ட மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, ரூ.7,210 கோடியில் இந்த திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் அமல்படுத்தப்படும். ‘அனைவருடைய ஆதரவுடன் அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற பிரதமர் மோடியின் இலக்கின்படி, தொழில்நுட்ப உதவியுடன் அனைவருக்கும் நீதி கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்யும்.
இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT