Published : 14 Sep 2023 06:37 AM
Last Updated : 14 Sep 2023 06:37 AM
அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்ட குணம் கொண்டவர். அவர் ஒருபோதும் தவறு செய்திருக்க மாட்டார் என்று சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளருமான லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொலைபேசி மூலம் பேசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திராபாபு நாயுடுவின் கடந்த ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ. 371 கோடி ஊழல் நடந்ததாக 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவை கடந்த சனிக்கிழமை, சிஐடி போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து ராஜமகேந்திர வரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்திரபாபுநாயுடுவை 5 நாட்கள் விசாரணைக்கு எடுத்து விசாரிக்க சிஐடிபோலீஸார் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அதே சமயம், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்குமாறும்,சிஐடி விசாரணைக்கு அனுமதிக்க கூடாது எனவும் நாயுடு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைவிசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், வரும் 18-ம் தேதிவரை சந்திரபாபு நாயுடுவை விசாரிப்பதற்கு சிஐடி போலீஸாருக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து வரும் 19-ம் தேதி நீதிமன்றம், விசாரணை நடத்த உள்ளது. சந்திரபாபு நாயுடு மீது மேலும் 3 வழக்குகளை தொடர முதல்வர் ஜெகன் தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது. இதன்மூலம் ஜாமீனில் சந்திரபாபு நாயுடு வெளியே வரமுடியாதபடி, வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால், இந்த 3 வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்கூட்டியே ஜாமீன் வழங்கிட வேண்டுமென சந்திரபாபு நாயுடு தரப்பில் நேற்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்றதை தொடர்ந்து, பலர் இதற்குகடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது வேண்டுமென்றே ஜெகன் அரசு செய்த பழி வாங்கும் செயல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து, நேற்று நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான லோகேஷுக்கு தைரியம் கூறியுள்ளார்.
ரஜினி மேலும் கூறியதாவது: என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு பெரும் போராட்ட குணம் கொண்டவர். அவர் ஒருபோதும் தவறு செய்திருக்க மாட்டார். அவர் இதுவரை செய்த நல்ல திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளே அவரை காப்பாற்றும். பொய் வழக்குகள், சிறைகள் அவரை ஒன்றும் செய்யாது. அவர் செய்த நல்ல பணிகளே அவரை இந்த பிரச்சினையில் இருந்து வெளியே அழைத்து வந்து விடும். நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு தற்போது ஆந்திர அரசியலிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் வைரல் ஆகி வருகிறது.
இதையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸார் மீண்டும் ரஜினியை எதிர்க்க தயாராகி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT