Last Updated : 14 Sep, 2023 05:19 AM

2  

Published : 14 Sep 2023 05:19 AM
Last Updated : 14 Sep 2023 05:19 AM

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை பெங்களூருவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூட்டினார். இதில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பெங்களூரு: கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. 195 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருக்கிறது. இதனால், தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது என்று, அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு, முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 86-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் கடந்த12-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்ற‌னர்.

இதில் பேசிய தமிழக அரசு அதிகாரிகள், ‘‘காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, கர்நாடக அரசுமுறையாக விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கவில்லை. இதனால், தமிழகத்தில் பயிர்கள் கருகியுள்ளன. எனவே,நிலுவையில் உள்ள 44 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினர்.

தீவிர ஆலோசனைக்கு பிறகு, ‘தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா பரிந்துரை செய்தார்.

அதற்கு கர்நாடக அரசு, செப்.12-ம்தேதிக்கு பிறகு, தமிழகத்துக்கு நீர்திறக்க முடியாது என‌ உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவசர அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். பெங்களூருவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள்ஹெச்.சி.மஹாதேவப்பா, கே.ஜே.ஜார்ஜ், மைசூரு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, மண்டியா எம்.பி. சுமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஜத முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

நீர்வளத் துறை பொறுப்பு அமைச்சர் டி.கே.சிவ‌குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையின் அளவு, கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளின் நீர்மட்ட நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.

இதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார்.

கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்: கர்நாடகாவுக்கே பற்றாக்குறையாக உள்ள நிலையில், தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என்று, ஏற்கெனவே நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதையே இந்த கூட்டத்திலும் முன்மொழிவதாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூறினர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:

கர்நாடகாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. கடந்த 123ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட‌ந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தஅளவுக்கு மழை பதிவாகியுள்ளது. மழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் இந்த ஆண்டுமுழு கொள்ளளவை எட்டவில்லை. கர்நாடகாவில் 195 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அணைகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் தமிழகத்தின் பாசனத்துக்கு நீர் திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகா இருக்கிறது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

கர்நாடகாவில் நிலவும் உண்மை நிலையை உச்ச நீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எடுத்துரைக்க முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவின் வறட்சி நிலையை ஆய்வு செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவை இங்கு வருமாறு கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

நீர்வளத் துறை பொறுப்பு அமைச்சர் டி.கே.சிவகுமார் டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். கர்நாடக அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து, இதுகுறித்து பேச நேரம் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக நான் மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x