Published : 13 Sep 2023 07:40 PM
Last Updated : 13 Sep 2023 07:40 PM

காங். ஆட்சிக் கால ஊழல்களை அம்பலப்படுத்தியதாக ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்துக்கு பாஜக பாராட்டு

புதுடெல்லி: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜவான்’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாஜக, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியை அப்படம் அம்பலப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 8-ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தந்தை - மகன் என 2 வெவ்வேறு வேடங்களில் ஷாருக்கான் இப்படத்தில் நடித்துள்ளார். சமூகப் பிரச்சினைகளைப் பேசும் இப்படம், கடந்த 6 நாட்களில் ரூ.621 கோடியை படம் வசூலித்துள்ளது. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைக்க சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் அரசியல் தலைவர், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் பெரும் பணக்காரர்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு, அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் குழந்தைகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது, அரசின் ஆயுதக் கொள்முதலில் நடக்கும் ஊழலால் தரமற்ற ஆயுதங்களை ஏந்திய ராணுவ வீரர்கள் போர்முனையில் உயிரிழப்பது, தேசத்தைக் காக்கும் வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ஊழல்வாதிகளின் சதியால் தேசத் துரோக முத்திரை குத்தப்பட்டு பலியாக்கப்படுவது என பல்வேறு சமூக அவலங்களை உண்மைச் சம்பவங்களை இப்படம் ஆங்காங்கே பேசியிருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "ஊழல் நிறைந்த, கொள்கை முடக்குவாதமடைந்த முந்தைய காங்கிரஸ் அரசை தனது ஜவான் படத்தில் அம்பலப்படுத்தியதற்காக ஷாருக் கானுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த ஐமுகூ ஆட்சியின் சோகமான கடந்த கால அரசியலை இப்படம் நினைவுபடுத்துகிறது.

காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் என ஊழல் மலிந்த அரசாக முந்தைய அரசு இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற அரசாக, தூய்மையான நிர்வாகத்தைத் தரும் அரசாக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மையைம் நேர்மையையும் மோடி அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது.

ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது. ஒரு ரேங்க்; ஒரே பென்ஷன் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கியுள்ளது. ராணுவத்தை வலுப்படுத்த ரஃபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக, விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு உடனுக்குடன் பதிலடியை மோடி அரசு கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், மும்பை தாக்குதல் நடந்தபோது அதற்கு பதிலடி கொடுக்க துல்லிய தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது அதற்கு அப்போதைய அரசு அனுமதி மறுத்தது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரவு வைக்கிறார். இவ்வாறு, 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2.55 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கூடுதல் வங்கிக் கடன் கொடுக்கப்பட்டது. இதற்காக, விஜய் மல்லையா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்தார். மோடி அரசு, கடனை திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து ரூ.6.5 லட்சம் கோடியை வசூலித்துள்ளது. கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை நினைவுகூர வைத்ததற்காக ஷாருக்கானுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x