Published : 13 Sep 2023 06:03 PM
Last Updated : 13 Sep 2023 06:03 PM
காந்திநகர்: டிஜிட்டல் முறை சுகாதார சேவையில் இந்தியா முன்னுதாரணமாக திகழும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் குறிக்கோள், எந்த கிராமும் எந்தவொரு நபரும் தரமான சுகாதார சேவைகளில் இருந்து விடுபடக்கூடாது என்பதாகும். உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இலக்கை அடைவதில் நமது நாட்டை இது வெற்றியடையச் செய்யும். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருந்தால், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதி நிறைவேற்றப்படும். இந்த இலக்கை அடைவதற்கு பல அமைச்சகங்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பெரிய இலக்குகளை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் உதவியாக இருக்கும்.
அனைத்து பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன. சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயுஷ்மான் கூட்டங்களை ஏற்பாடு செய்தல்; ஆயுஷ்மான் விழாக்களை ஏற்பாடு செய்தல் மற்றும் வீடுகளுக்கே ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயன்களை வழங்குதல் ஆகியவற்றின் கீழ் பல்வேறு சேவைகளை வழங்குவது பாராட்டுக்குரியது.
பல துறைகளில் புதிய தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகளை பின்பற்றுவதில் இந்தியா மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், 2021-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. மற்ற துறைகளைப் போலவே சுகாதார சேவைகள் துறையிலும் டிஜிட்டல் நடைமுறைகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கும்" என தெரிவித்தார்.
‘ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன்முயற்சியாகும். இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தையும் சென்றடையும் வகையில் விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்’ என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT