Published : 12 Sep 2023 07:09 PM
Last Updated : 12 Sep 2023 07:09 PM

தொடர் ஆராய்ச்சிகளால் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி பல மடங்கு உயர்வு: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

புதுடெல்லி: தொடர் ஆராய்ச்சிகள் காரணமாக இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் உரிமைகள் குறித்த முதல் உலகளாவிய கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுடெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "உலகின் விவசாயத் துறை அதன் அதிமுக்கிய பாதுகாவலராக இருப்பதோடு, பல்வகை பயிர்களின் உண்மையான பாதுகாவலராகவும் இருக்கிறது. விவசாயிகளுக்கு அசாதாரண அதிகாரமும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்றியமையாத பல வகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவுமான விவசாயிகளின் முயற்சியை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள மாபெரும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. என்றபோதிலும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வகையில், ஏழு முதல் எட்டு சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தைப் பொறுத்தவரை மிக பரவலான தாவரங்கள் மற்றும் உயிரினங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.

இந்தியாவின் வளமான வேளாண் பன்மைத்துவம், உலக சமூகத்திற்கு களஞ்சியமாக திகழ்கிறது. நமது விவசாயிகள் கடுமையாக பாடுபட்டு தாவரங்களின் உள்ளூர் வகைகளை பாதுகாத்து வருகின்றனர். இதனால் மனித குலத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை இந்தியா உறுதிசெய்கிறது.

1950-51 தொடங்கி வேளாண் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக உணவு தானியங்கள், தோட்டப்பொருட்கள், மீன்வளம், பால் மற்றும் முட்டைகளின் உற்பத்தி இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் பலவகையான வேளாண் புரட்சிகளுக்கு அரசின் உதவியுடன் வேளாண் பன்முகப்பாதுகாப்பாளராகவும் தொழில்முனைவோராகவும் உள்ள விவசாயிகள், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்போர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். பாரம்பரிய ஞானத்தைப் பாதுகாப்பதாகவும், விரிவாக்கம் செய்வதாகவும் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் இருக்க முடியும்" என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

கருத்தரங்கில் பங்கு பெற்றோர்

ரோமில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உணவு மற்றும் விவசாயத்திற்குரிய தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x