Published : 12 Sep 2023 04:24 PM
Last Updated : 12 Sep 2023 04:24 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டில் அவரது 102-ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் பேராசிரியர்களும், தமிழ் பயிலும் மாணவர்களும், பாரதியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாரணாசியின் கங்கை கரையில் அனுமன் காட் எனும் படித்துறை பகுதியிலுள்ள வீட்டில் மகாகவி பாரதியார் சில ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கு தற்போது அவரது சகோதரியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில், மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாருக்கு அஞ்சலி செலுத்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் இந்திய மொழிகள் துறை சார்பில் அதன் தமிழ் பிரிவு மாணவர்கள் வந்திருந்தனர்.
பாரதியார் வீட்டின் ஓர் அறையில் தமிழக அரசு சார்பில் பாரதியாருக்கு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் உள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கும், அனுமன் காட் பகுதியின் நுழைவு வாயிலில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழக இந்திய மொழிகள் துறையின் தலைவர் பேராசிரியர் திவாகர் பிரதான் தலைமை வகித்தார். இவரது தலைமையில் பாரதியாரின் இரண்டு சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பாரதியின் சகோதரியின் பேத்தியும், இசைப் பேராசிரியருமான ஜெயந்தி முரளி முன்னிலை வகித்தார். மேலும், தமிழக அரசின் பாரதியார் நினைவகத்தை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியரான கங்காதரன், மராத்தி துறைத்தலைவர் பிரமோத் பக்வான் படுவல் ஆகியோரும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாரதி பற்றிய ஆய்வுகளை பற்றியும் இவர்கள் அங்கு கூடியிருந்த மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு அப்பல்கலையின் தமிழ் பிரிவின் உதவி பேராசிரியர் த. ஜெகதீசன் மற்றும் இந்திய மொழிகள் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT