Published : 12 Sep 2023 03:05 PM
Last Updated : 12 Sep 2023 03:05 PM
புதுடெல்லி: தேசத் துரோக வழக்குகள் பதிவதற்குக் காரணமாக உள்ள சட்டப்பிரிவு 124A-க்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A (தேசத் துரோகச் சட்டம்) செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சட்டப்பிரிவு 124A இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். மே 2022-இல் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அதோடு, தேசத் துரோகச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
இதையடுத்து, மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. அந்த மசோதாவில், வெளிப்படையாக பிரிவு 124A இல்லாவிட்டாலும், அது பிரிவு 150-ஐ கொண்டுள்ளது. இந்த புதிய மசோதாவில் முன்மொழியப்பட்ட விதி 'தேசத் துரோகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறது. அதேநேரத்தில், அதற்கு பதிலாக "இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவித்தல்" என்ற பதம் இடம்பெற்றுள்ளது.
அதோடு, இந்த மசோதா சட்டமானாலும், அது வருங்கால குற்றங்களுக்கு மட்டுமே பொறுந்தும் வகையில் உள்ளது. கடந்த கால விளைவுகளுக்கு அது பொறுந்தாது. சுருக்கமாக, 124A பிரிவின் கீழ் தற்போதுள்ள குற்றவியல் நடவடிக்கைகள் புதிய சட்டம் இருந்தாலும் தொடரும். ஆனால், தேசத் துரோக சட்டம் 124A-ன் கீழ் தற்போது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சட்டம் 124A-ன் செல்லும் தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வந்தால் மட்டுமே அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்க முடியும்.
எனவே, சட்டம் 124A-ன் செல்லும் தன்மைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள மனுக்கள், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகின்றன. அதோடு, தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு முன் இருக்கும் புதிய மசோதாவின் நிலையை அறியும் வரை பிரிவு 124A-க்கு எதிரான வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்கிறது. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT