Published : 12 Sep 2023 09:27 AM
Last Updated : 12 Sep 2023 09:27 AM
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது, நீரில் மூழ்கியது, மின்னல் தாக்கியது என பல்வேறு சம்பவங்களில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் பல இடங்களிலும் பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது. தலைநகர் லக்னோ, பாரபங்கி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் சராசரியாக 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மொரதாபாத், சம்பல், கனோஜ், ராம்பூர், ஹத்ராஸ், பாராபங்கி, காசிகஞ்ச், பிஜ்னோர், அமோரா, பராயிச், லக்னோ, பதான், மயின்புரி, ஹர்தோய், ஃபிரோஸாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், கான்பூர், சிதாபூர், ஃபரூக்காபாத், லக்கிம்பூர் கேரி, ஃபதேபூர்.
இதற்கிடையில் வரும் 14 ஆம் தேதிவரை நாட்டில் பரவலாக பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், "ஒடிசாவில் ஆங்காங்கே கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக்கூடும். உத்தராகண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஆங்காங்கே பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், விதர்பாம் சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், இடிசா, கடலோர ஆந்திரா, ஏனாம், வடக்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹேவில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT