Published : 12 Sep 2023 06:57 AM
Last Updated : 12 Sep 2023 06:57 AM
புதுடெல்லி: லண்டன், அயர்லாந்து நாடுகளில் பேக்கிங் செய்யப்பட்ட புற்றுநோய், கல்லீரல் பாதிப்புக்கான போலி மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசின் டிசிஜிஐ நிறுவனம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புற்றுநோய் தடுப்புக்காக அட்செட்ரிஸ் (Adcetris) என்னும் ஊசி மருந்து மற்றும் கல்லீரல் பாதிப்பை தடுக்கும் டிஃபைடெலியோ (Defitelio) ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், இம்மருந்துகள் போலியாகத் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனையாவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த போலி மருந்துகள் இரண்டும் லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இதை குறிப்பிட்டு மத்திய அரசின் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் (டிசிஜிஐ) நிறுவனம், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: இந்த போலி மருந்துகளில் புற்றுநோய்க்கான ஊசி மருந்துகள், கடைசியாக சுமார் எட்டு வரிசை எண்களுடன் விற்பனையில் இருந்துள்ளன. இந்த தகவல் உலக சுகாதார நிறுவனம் மூலம் டிசிஜிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு டிசிஜிஐ எச்சரிக்கை கடிதத்தை தற்போது அனுப்பியுள்ளது. அதில், புற்றுநோய் தடுப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு தடுப்புக்கான இந்த இரண்டு குறிப்பிட்ட மருந்துகளின் பெட்டிகளில் தோராயமாக ஒன்றை எடுத்து பரிசோதிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோதனை தொடக்கம்: மேலும், மருத்துவர்களும், சுகாதார ஆய்வாளர்களும் இக்குறிப்பிட்ட மருந்துகளை பரிந்துரைக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த யோசனை கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் Adcetris மற்றும் Defitelio மருந்துகள் மீதான சோதனை ஆங்காங்கே நடைபெற தொடங்கி உள்ளது. இந்த மருந்துகளை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் தான் போலி மருந்துகள் விற்பனையாவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊசி மருந்துகள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT