Published : 11 Sep 2023 07:59 AM
Last Updated : 11 Sep 2023 07:59 AM

உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டபோது இந்தியாவின் வலுவான தலைமையால்தான் ஜி20 பிரகடனம் ஏற்கப்பட்டது: ஐரோப்பிய யூனியன் மூத்த அதிகாரி தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி: டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று முடிந்தது. சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், ஜி20 உறுப்பு நாடுகளின் சார்பில் டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டது. முன்னதாக இந்த பிரகடனத்தில் உக்ரைன் மீதான போர் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஓரணியாகவும், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஓரணியாகவும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினரிடமும் இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான குழு, சில பரிந்துரைகளை செய்து பிரகடனத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை ஜி20-யில் அங்கம் வகிக்கும் அனைத்து நாட்டு தலைவர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஐரோப்பிய யூனியன் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜி20 டெல்லி பிரகடனம் வெளியாவதில் இந்தியாவின் தலைமை மிகப் பெரிய பங்கு வகித்தது. ஜி20-யில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உருவாக்கியதில் இந்த அமைப் புக்கு இந்தியா தலைமை பொறுப்பில் இருந்ததுதான் முக்கிய காரணம். இந்தியா தலைமையில் ஜி20 அமைப்பு மிக வலிமையாக உள்ளது. பிரகடனம் தொடர்பாக இடைவிடாமல் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இந்தியாவின் தலைமையில்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது.

இவ்வாறு ஐரோப்பிய யூனியன் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ஜி20 டெல்லி பிரகடனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில்முக்கியமானதாக உக்ரைன்மீதான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக கூறப்பட்டிருந்தது. அதில்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பின்னர்இந்தியா தலையிட்டு சுமூகமாக முடித்து வைத்தது. முன்னதாக இந்த பிரகடனத்தை உருவாக்குவதிலும், ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும் ஜி20-யின் ஒருங்கிணைப்பாளராக (ஷெர்பா) அமிதாப் காந்த் செயல்பட்டுள்ளார்.

இவர் நிதி ஆயோக்கின் சிஇஓ.வாக இருந்தவர். ஜி20 பிரகடனம் தொடர்பாக ஒருமித்த கருத்துஏற்பட அனைத்து தரப்பினரிடமும் 200 மணி நேரத்துக்கும் மேல் பல நாட்டு தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதன் பலனாக பிரகடனம் வெற்றிகரமாக வெளியானது. இதற்காக அமிதாப் காந்த்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதன் மூலம் ஜி20 பிரகடனத்தில் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு வெளிப்படையான கண்டனம் தெரிவிப்பது தவிர்க்கப்பட்டது. அதற்கு பதில் அவரவர் எல்லை பிரச்சினையில் அனைத்து நாடுகளும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சேர்க்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘உணர்வுப்பூர்வமாக ஒன்றுபட்டு ஒருமித்த கருத்து உருவாவதற்கு ஒத்துழைப்பு அளித்த தலைவர்களுக்கு மிகவும் நன்றி. சிறந்த எதிர்காலத்துக்காக ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம். அதற்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அளித்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x