Published : 10 Sep 2023 07:36 PM
Last Updated : 10 Sep 2023 07:36 PM
பாரிஸ்: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து பேசினார்.
அப்போது, இந்தியா vs பாரத் சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொற்களுமே உள்ளன. அதனால் எங்களுக்கு அந்த இரண்டு சொற்களின் பயன்பாட்டிலுமே எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இண்டியா என்று பெயர் சூட்டப்பட்டதால் பாஜகவுக்கு இந்தியா என்ற பெயர் எரிச்சலூட்டுகிறது. அதனாலேயே அவர்கள் பெயரை மாற்ற முற்படுகிறார்கள். இந்தியாவின் ஆன்மாவை சிதைக்க நினைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரின் பங்களிப்பை முடக்கப் பார்க்கிறது. சிறுபான்மையினர் என்பதாலேயே அவமதிக்கப்படுவார்கள் என்றால் எனக்கு அத்தகைய இந்தியா வேண்டாம். தங்கள் சொந்த தேசத்திலேயே சிறுபான்மையின மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது இந்தியாவுக்கு அவமானம். சீக்கியர்களும், பெண்களும் இன்னும் பிற சிறுபான்மையினரும் உள்ளடக்கிய 20 கோடி மக்கள் அசவுகரியமாக உணர்வார்கள் என்றால் அது நம் அனைவருக்கும் அவமானம் தானே. அது சரி செய்யப்பட வேண்டும் அல்லவா? இவ்வாறாக ராகுல் காந்தி பேசினார்.
இந்து அடையாளம் ஏதுமில்லை: தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் கொள்கையில் இந்து மதக் கொள்கை ஏதும் இல்லை. நான் பகவத் கீதை படித்துள்ளேன். உபனிடங்களும் கற்றுள்ளேன். எந்த ஒரு இந்து மத நூலிலும் தன்னைவிட வரியவரை துன்புறுத்தச் சொல்லப்படவில்லை. பாஜகவினர் அவர்கள் கூறிக்கொள்வதுபோல் இந்து தேசியவாதிகள் அல்ல. அவர்கள் அதிகாரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பாஜகவின் சித்தாந்தத்தில் இந்து அடையாளம் ஏதுமில்லை" என்றார். மேலும், சீனா உற்பத்தியில் உலக நாடுகளை விஞ்சுகிறது. ஆனால் ஜனநாயகமற்ற முறையில் அதை சாத்தியப்படுத்துகிறது. சீன உற்பத்திகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பாவுக்கும் அச்சுறுத்தல் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT