Published : 10 Sep 2023 01:48 PM
Last Updated : 10 Sep 2023 01:48 PM
புதுடெல்லி: ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரம் பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (செப்.10) காலை டெல்லி ராஜகாட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வருகை தந்தனர். மழைக்கு நடுவே வருகைதந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உலகத் தலைவர்கள் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்துக்கு வந்தனர். அங்கே அவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய கருத்தரங்குகள் நடைபெற்றன.
அதன் தொடர்ச்சியாக ஜி-20 கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரத்தை பிரதமர் மோடி பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைத்தார். பின்னர் பேசிய அவர், டிசம்பர் மாதம் வரை ஜி20 தலைமைப் பொறுப்பில் இருப்பதால் நவம்பரில் காணொலி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார். பின்னர் பிரதமர் மோடி ஜி20 கூட்டம் நிறைவு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
மாநாட்டின் இறுதி உரையின்போது பிரதமர் மோடி பேசுகையில், "ஒரே பூமி, ஒரே குடும்பம் பற்றி நேற்றைய மாநாட்டில் நாம் பேசினோம். இன்று ஜி20 கூட்டமைப்பு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கு ஒரு நேர்மறையான தளமாக உருவாகியுள்ள திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT