Published : 10 Sep 2023 06:15 AM
Last Updated : 10 Sep 2023 06:15 AM
புதுடெல்லி: ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நேற்று நிரந்தர உறுப்பினர் ஆனது. ஜி20 தொடங்கியதில் இருந்து அது, விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஜி20 கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சேர ஆப்பிரிக்க யூனியன் பல ஆண்டுகளாக முயன்று வந்தது. ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இதன் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை தொடர்ந்து, ஆப்பிரிக்க யூனியன் புதிய நிரந்தர உறுப்பினர் ஆனது.
ஜி20 நிரந்தர உறுப்பினருக்கான இருக்கையில் அமர ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசாலி அசவ்மானிக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கும்போது, “அனைவரையும் அழைத்துச் செல்வது என்ற உணர்வுக்கு ஏற்ப, ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20-ல் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு அனைவரும் உடன்படுவதாக நான் நம்புகிறேன்” என்றார்.
இதையடுத்து உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆப்பிரிக்க யூனியனை வரவேற்றனர். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பிரதமர் மோடியும் அசாலி அசவ்மானியை நிரந்தர உறுப்பினருக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், “ஜி20 குடும்பத்தில் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஜி20 அமைப்பை வலுப்படுத்துவதுடன் உலகலாவிய தெற்கு நாடுகளின் குரலையும் வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளாக உலகளாவிய தெற்கு நாடுகளின் குறிப்பாக, ஆப்பிரிக்க கண்டத்தின் கவலைகள், சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்காக குரல் கொடுப்பதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது. ஆப்பிரிக்க யூனியனை ஜி20 உறுப்பினராக சேர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டி வந்தார். இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் ஜி20 தலைவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் ஆப்பிரிக்க யூனியனுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து கர்நாடக மாநிலம் ஹம்பியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜி20 தொடர்பான கூட்டத்தில் உச்சி மாநாடு தொடர்பான வரைவு அறிக்கையில் இதற்கான முன்மொழிவு சேர்க்கப்பட்டது.
ஆப்பிரிக்க கண்டம்: ஆப்பிரிக்க கண்டத்தில் 55 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட செல்வாக்குமிக்க அமைப்பாக ஆப்பிரிக்க யூனியன் உள்ளது. இந்த அமைப்பு 55 உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் ராணுவ ஆட்சியில் உள்ள 6 நாடுகள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் சுமார் 104 கோடி மக்களுடன் 3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆப்பிரிக்க யூனியன் கொண்டுள்ளது. உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் 60 சதவீதமும் புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான 30% தாதுப் பொருட்களையும் ஆப்பிரிக்கா கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT