Published : 10 Sep 2023 03:50 AM
Last Updated : 10 Sep 2023 03:50 AM
புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஜி-20 உச்சி மாநாட்டைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் நிலவும் நம்பிக்கை பற்றாக்குறையை, ‘எல்லோருக்கும் எல்லாம்' மந்திரம் நிச்சயம் மாற்றும் என்று உறுதிபடக் கூறினார்.
ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாம் கூடியிருக்கும் இடத்திலிருந்து சில கி.மீ. தொலைவில், 2,500 ஆண்டுகள் பழமையான அசோகர் தூண் அமைந்துள்ளது. அதில் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளில், ‘மனித குலம் எப்போதும் நலம், வளம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மண்ணின் இந்தப் பொன்மொழியை நினைவுகூர்ந்து ஜி-20 உச்சி மாநாட்டைத் தொடங்குகிறோம்.
இந்த 21-ம் நூற்றாண்டு ஒட்டுமொத்த உலகத்துக்கும் புதிய திசையைக் காட்டுகிறது. பழைய சவால்களுக்கு புதிய தீர்வுகளைக் காண்பதுடன், மனித குலத்தின் நலனை முன்னிறுத்தி, நாம் ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ‘நம்பிக்கைப் பற்றாக்குறை' என்ற மிகப் பெரிய நெருக்கடியை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதற்கு ‘பரஸ்பர நம்பிக்கை' மூலம் தீர்வுகாண முடியும். அனைவருக்குமான ஆதரவு, வளர்ச்சி, நம்பிக்கை, முயற்சி என்ற தாரக மந்திரத்தை இந்தியா பின்பற்றி வருகிறது. இதன்படி, உலக அளவில் நிலவும் நம்பிக்கைப் பற்றாக்குறையை, ‘எல்லோருக்கும் எல்லாம்' என்ற இந்தியாவின் தாரக மந்திரம் நிச்சயம் மாற்றும். மனித குலத்தின் நன்மையைக் கருதி, ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது.
சர்வதேச சவால்கள்: உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு, வடக்கு, தெற்கு நாடுகளிடையே பிளவு, கிழக்கு, மேற்கு நாடுகளிடையே இடைவெளி, உணவு தானியம், எரிபொருள், உரம், தீவிரவாதம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, தண்ணீர் சார்ந்த பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகள், சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இவற்றுக்கு ஒன்றிணைந்து தீர்வுகாண வேண்டும்.
இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பு மாநாடுகளை மக்கள் இயக்கமாக மாற்றினோம். சுமார் 60 நகரங்களில் நடைபெற்ற 200-க்கும்மேற்பட்ட மாநாடுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைக்க இந்தியா பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஜி-20 உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலியில் நடத்தப்பட்டது. அப்போது‘பாலி பிரகடனம்' நிறைவேற்றப்பட்டது. இதேபோல, தற்போது டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லி பிரகடனத்தை இந்தியா தயாரித்துள்ளது.
பூமியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். உலகப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வேண்டும். சர்வதேச டிஜிட்டல் கரன்சி குறித்து ஆலோசிக்க வேண்டும். கடல்சார் வணிகத்தை மேம்படுத்த வேண்டும். கடல் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். சர்வதேச அளவில் ஊழல்களை ஒழிக்க வேண்டும்.
உலக நாடுகளில் பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க வேண்டும். உணவு தானியங்கள், எரிசக்தி தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். சர்வதேச சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமைத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். பருவநிலை மாறுபாட்டை தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும்.
பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். பாலின சமநிலை, பெண்கள் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும். ஒன்றுபட்ட உலகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT