Published : 10 Sep 2023 06:06 AM
Last Updated : 10 Sep 2023 06:06 AM

ஊழல் வழக்கு | தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது - சாலை மறியலால் ஆந்திரா ஸ்தம்பிப்பு

ஊழல் குற்றச்சாட்டில், ஆந்திராவின் நந்தியாலம் மாவட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வழியில் பேட்டியளித்தார். படம்: பிடிஐ

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 2018-ம் ஆண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ. 371 கோடி கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் அருகே உள்ள நந்தியாலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆளும் கட்சியினரின், மக்களுக்கு எதிரான ஆட்சி குறித்து அவர் பல மாவட்டங்களில் பேருந்துயாத்திரை மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், நந்தியாலம் ஆர்.கே திருமண மண்டபம் அருகே அவர் நேற்று முன் தினம் இரவு பேருந்திலேயே உறங்க சென்றார்.

அவருடன் வந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அந்த திருமண மண்டபத்தின் அருகே இரவு முழுவதும் இருந்தனர். அப்போது டிஐஜி ரகுராம ரெட்டி மற்றும் நந்தியாலா எஸ்பி. ரகுவீரா ரெட்டி தலைமையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் 600க்கும் மேற்பட்ட போலீஸார் 6 பேருந்துகளில் திடீரென அப்பகுதிக்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனால், கட்சி நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பலரை போலீஸார் இரவோடு இரவாக கைது செய்தனர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு இருந்த பேருந்தின் கதவை திறக்கும்படி தட்டினர். ஆனால், சந்திரபாபு நாயுடு திறக்கவில்லை. அதன் பிறகு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சந்திரபாபு நாயுடு பேருந்தின் கதவை திறந்து விசாரித்தார். அவருடன் போலீஸார் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘‘தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், மாநிலம் முழுவதும் சீமென்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் மூலம் சீர்மிகு மையங்கள் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ. 371 கோடி கைமாறியதில் ரூ.118 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீங்கள் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். ஆதலால், உங்களை கைது செய்கிறோம்’’ என சிஐடி போலீஸார் கூறினர்.

இதற்கு எஃப் ஐ ஆர் உள்ளதா ?ஆதாரங்கள் உள்ளதா ? என சந்திரபாபு நாயுடு கேட்டார். அவற்றை வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறோம் என போலீஸார் பதிலளித்து, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை அவரது கார் மூலமாகவே நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து சென்றனர்.

தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்: சந்திரபாபு நாயுடுவை நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதி வரை தொடர்ந்து 8 மணி நேரம் போலீஸார் காரில் அழைத்து சென்றனர். வழி நெடுகிலும் தெலுங்கு தேசம் கட்சியினர்சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாககுரல் கொடுத்தனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை முதலே ஆந்திராவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவாறு, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்களை போலீஸார் அவரவர் வீடுகளிலேயே ஹவுஸ் அரெஸ்ட் செய்தனர். ஆயினும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் ஆந்திராவில் நேற்றுஅதிகாலை முதலே பேருந்து பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டன. தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநில எல்லைகளிலேயே ஆந்திராசெல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.திருப்பதி-திருமலை இடையேமட்டும் பேருந்து போக்குவரத்துநிறுத்தப்பட வில்லை. தெலங்கானாவில் ஜெகன் மோகனை கண்டித்து அவரது உருவ பொம்மையை தெலுங்கு தேசம் கட்சியினர் எரித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் ஆந்திராவில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

ஆந்திர ஆளுநருக்கு தர்ம சங்கடம்: சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பாக ஆளுநர் நசீரிடம் சிஐடி அதிகாரிகள், அனுமதி கோரினர். இதனை கேட்டு ஆளுநர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார்.

2018 சட்ட திருத்தத்தின் படி, மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகளை கைது செய்ய வேண்டுமெனில், முன் கூட்டியே ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இதுவரை ஆளுநரிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதனால், ஆளுநர் நசீர் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி உள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆளுநரின் அனுமதி இன்றி, சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததால், கைது செய்தர்களின் பதவி கூட பறி போகலாம் என கூறப்படுகிறது. மேலும், ஆளுநரின் அனுமதி இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததால், அது செல்லாது எனவும் கூறப்படுகிறது. ஆதலால், சந்திரபாபு நாயுடுவை நீதிமன்றம் விடுதலை செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x