Published : 09 Sep 2023 07:31 PM
Last Updated : 09 Sep 2023 07:31 PM

ஜி20 உச்சி மாநாடு | டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுடெல்லி ஜி20 தலைவர்களின் பிரகடனம் ஏற்கப்பட்டு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடனும் எண்ணத்துடனும் இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறந்த, வளமான மற்றும் இணக்கமான எதிர்காலத்துக்காக ஒத்துழைப்போம் என்று உறுதியளிக்கிறோம். அனைத்து G20 உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எனது நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த பிரகடனத்தை மத்திய அரசு சார்பிலான குழு தயாரித்து, அதனை உறுப்பு நாடுகளின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. அனைத்து நாடுகளும் இந்தப் பிரகடனத்துக்கு ஒப்பதல் அளித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி20 மாநாட்டின் முக்கிய நிர்வாகியான அமிதாப் காந்த், "பிரகடனம் 83 பாராக்களைக் கொண்டது. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை, அடிக்குறிப்புகள் இல்லை. புதுடெல்லி தலைவர்கள் பிரகடனம் இணையற்ற உலகளாவிய ஒருமித்த கருத்தை குறிக்கிறது.

புதுடெல்லி தலைவர்கள் பிரகடனம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அனைத்து வளர்ச்சி மற்றும் புவி அரசியல் பிரச்சினைகளிலும் 100% ஒருமித்த கருத்துடன் செல்வதற்கான பிரகடனம் இது. இன்றைய புதிய புவிசார் அரசியல் உலகில், பூமி, மக்கள், அமைதி மற்றும் செழிப்புக்கான சக்திவாய்ந்த அழைப்பு. இன்றைய உலகின் தலைவரான பிரதமர் மோடி இதை நிகழ்த்தி இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமிதாப் காந்த், "இந்தப் பிரகடனம் பெருமளவில் பெண் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டது. பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கான உணவு பாதுகாப்பு, அவர்களின் நலம் ஆகியவற்றுக்கு இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரகடனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டி, "இது மிகச் சிறந்தது என நான் நினைக்கிறேன். இதன்மூலம், நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்" என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x