Published : 09 Sep 2023 03:44 PM
Last Updated : 09 Sep 2023 03:44 PM
புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்ற மேடையில் கோனார்க் சக்கரம் அமைக்கப்பட்டிருப்பது பலவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. அப்போது, மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அவர் வரவேற்ற மேடையின் பின்னணியில் கோனார்க் சக்கரம் அமைக்கப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. இந்தியாவின் பழம்பெருமையையும், அதன் கலாச்சார வளத்தையும் உலகுக்கு உணர்த்தும் விதமாக மேடை வடிவமைக்கப்பட்டிருந்தது.
கோனார்க் சக்கரத்தின் வரலாற்றுச் சிறப்பு குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கிக் கூறினார். இந்த சக்கரம், 13-ம் நூற்றாண்டில் ஒடிசாவின் கோனார்க் பகுதியில் அப்போதைய மன்னர் முதலாம் நரசிம்மதேவரால் சூரியனுக்காகக் கட்டப்பட்ட கற்கோயிலில் உள்ள சக்கரத்தின் மாதிரி. இந்த கோயிலில் மொத்தம் 12 சக்கரங்கள் உள்ளன. இந்தக் கோயில், ஒரு தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சக்கரமும் தனிச்சிறப்பு கொண்டவை. இது தர்ம சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசியக் கொடியில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணிக்கு உரியது இந்தக் கோயில்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோயிலின் சக்கரம் ஜி20 மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருப்பதற்கு, மத்திய அமைச்சரும் ஒடிசாவைச் சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒடிசாவின் காலத்தால் அழியாத அதிசயம் - கோனார்க் சக்ரா, தற்போது ஜி20 மாநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் பிரதான இடத்தில் இடம் பெற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக ஒவ்வொரு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய தருணம்.
இந்தியாவின் நாகரிக, கலாச்சார மற்றும் கட்டிடக்கலை சிறப்பின் சின்னமாகவும், காலத்தின் தொடர்ச்சியையும் முன்னேற்ற்தையும் குறிப்பதாகவும் கோனார்க் சக்ரா திகழ்கிறது. இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் அறிவு மரபின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு விளக்கிக் கூறும் காட்சி உண்மையில் மிகவும் அழகானது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT