Published : 09 Sep 2023 03:38 PM
Last Updated : 09 Sep 2023 03:38 PM

‘சந்திரபாபு நாயுடுவை கைது செய்தது சட்டவிரோதம்’ - பிரதமருக்கு தெலுங்கு தேசம் கட்சி கடிதம்

கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2014-17 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், இன்று (செப்.9) அதிகாலை நந்தியாலாவில் அப்போதைய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்தனர். அவருடன் தெலுங்கு தேச சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கண்ட ஸ்ரீநிவாச ராவும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கட்சியின் எம்.பி. கேசினேனி ஸ்ரீநிவாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்கில் கைது செய்துள்ளது சட்டவிரோதம். அதுவும் ஒரு முன்னாள் முதல்வரை கைது செய்த விதத்தை பிரதமர் கவனிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், இதே கோரிக்கையை முன்வைத்து ஸ்ரீநிவாஸ் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, "எனது கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உண்மையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் அதிகாரிகள் நேற்றிரவு வந்து எந்த ஆதாரமும் கொடுக்காமல் என்னை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நான் எனது கைதுக்கான காரணத்தைக் கேட்டேன். அவர்கள் காட்டிய முதல் தகவல் அறிக்கையில் வழக்கில் எனது பங்கு என்னவென்பது கூட விவரிக்கப்படவில்லை. இது மிகவும் தவறானது. வருந்தத்தக்கது" என்றார்.

மேலும் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், "கடந்த 45 ஆண்டுகளாக நான் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டுள்ளேன். தெலுங்கு மக்களின் நலனுக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கு சேவையாற்றுவதிலிருந்து என்னை ஏதும் தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தபோது போலீஸார் அவரிடம், தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, திறன் மேம்பாட்டு கழகத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி, அதன் மூலம் 10 சதவீதம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரு.371 கோடி ஊழல் நடந்துள்ளது. அவ்வழக்கில் உங்களை 37-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். ஆதலால், உங்களை கைது செய்கிறோம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x