Published : 09 Sep 2023 03:15 PM
Last Updated : 09 Sep 2023 03:15 PM

“அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது” - ஜி20 விருந்துக்கு அழைக்கப்படாதது குறித்து கார்கே கருத்து 

மல்லிகார்ஜுன கார்கே | கோப்புப்படம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாதது சர்ச்சை ஏற்படுத்திய இருக்கும் நிலையில், அவர்கள் அரசியல் செய்திருக்கக் கூடாது என்று தனது மவுனத்தை கார்கே கலைத்துள்ளார்.

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அதன் 18 உச்சி மாநாடு டெல்லி இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லி வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து இன்று விருந்து வழங்குகிறார். இந்த விருந்து நிகழ்வு அதன் அழைப்பிதழில் தொடங்கி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. விருந்துக்கான அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது. அதன் சூடு குறைவதற்கு முன்பே, விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவரின் விருந்துக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, "அவர்கள் அதில் அரசியல் செய்திருக்கக் கூடாது" என்று பாஜக மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், "இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி கூறும்போது,"நாட்டின் 60 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரை அவர்களுக்கு மதிக்கத் தெரிவியவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறியிருந்தார். விருந்துக்கு கார்கே அழைக்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்திருந்து தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகரான மோகன் குமாரமங்களம், "மோடி இருந்தால் அங்கு மனுவும் இருக்கும்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டில்... - ஜி20 விருந்துக்கு கார்கே அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எந்த ஒரு ஜனநாயக நாட்டிலாவது உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் அரசு விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அழைக்கப்படாமல் இருப்பதை என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. ஜனநாயகமோ அல்லது எதிர்க்கட்சிகளோ இல்லாத நாட்டில்தான் இவ்வாறு நடக்கும். இந்தியா அதாவது பாரத் இன்னும் ஜனநாயகம் அல்லது எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை இன்னும் எட்டவில்லை என்று நான் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் ஜார்கண்ட முதல்வர் ஹேமந்த் சோரன் விருந்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ள நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் இருந்து சனிக்கிழமை காலை டெல்லிக்கு கிளம்பியிருந்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 விருந்து பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வைத்து சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா ஊக்கப்படுத்தி வரும் சிறுதானியமான தினைக்கு சிறப்பு இடம் தரப்பட்டு, அது தொடர்பான இந்திய உணவு வகைகள் இடம்பெற இருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x