Published : 09 Sep 2023 12:58 PM
Last Updated : 09 Sep 2023 12:58 PM

ஜி20 உச்சி மாநாடு 2023 | பிரதமர் மோடி முன் வைக்கப்பட்ட ‘பாரத்’ பெயர்ப் பலகை

பிரதமர் மோடி முன்பு பாரத் என்ற பெயர்ப் பலகை

புதுடெல்லி: இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. சனிக்கிழமை நடந்த முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் முன்னால் நாட்டினைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கு பதிலாக அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரத் என்ற பெயரை ஜி 20 மாநாட்டின் பல்வேறு அதிகாரபூர்வ ஆவணங்களில் அரசு பயன்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முழுமையான விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்ட முடிவு என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அளிக்க இருக்கும் ஜி20 விருந்துக்கான அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

இதன் தொடர்ச்சியாக, வரும் 18-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இது நாட்டை பெருமைப்படுத்தும் நடவடிக்கை என்று பாஜக தலைவர்கள் பதில் அளித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி தெரிவிக்கும் கருத்துகளால் இந்த விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரத் – இந்தியா சர்ச்சையில் இருந்து விலகியிருக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பெயர் மாற்றம் தொடர்பான வாதப் பிரதிவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தை முதல்முறையாக பிரதமர் தனது அமைச்சர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பின்புலத்தில், இந்தியா தலைமையேற்று நடத்திவரும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்னால் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. | அதன் விவரம்: ஜி-20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு

முன்னதாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட அனைத்துத் தலைவர்களும் மாநாட்டுப் பகுதிக்கு வந்தடைந்தனர். கடைசியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரவேற்றுச் சென்றார். அதன் விவரம்: ஜி20 உச்சி மாநாடு 2023 | பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x