Published : 09 Sep 2023 12:30 PM
Last Updated : 09 Sep 2023 12:30 PM
புதுடெல்லி: புது தில்லியில் புதிதாகக் கட்டப்பட்ட பாரத மண்டபத்தின் முதல் விருந்தினர் பெருமையை உலகப் பெருந்தலைவர்கள் பெற்றுள்ளனர். இன்று துவங்கியுள்ள ஜி20 என்பது, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய பன்னாட்டு அமைப்பாகும். இதற்கென நிலைப்பட்ட செயலகமோ, தலைவரோ கிடையாது.
ஒவ்வொரு ஆண்டும் ஜி20 உறுப்பினர்களில் ஒரு நாடு தலைமை ஏற்று பல செயல் திட்டங்களை தீர்மானித்து நடத்துகின்றன. ஆண்டுதோறும் வெறும் நிகழ்வாக கடந்து செல்லும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் இந்த ஆண்டு, ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது பாரதத்தின் திருவிழா. பாரதத்தின் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் பெருவிழா.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் 60 நகரங்களில் நடத்தப்பட்ட இதன் ஆலோசனைக் கூட்டங்கள், இந்தியாவின் கலாச்சார பன்முகத்தை பறைசாற்றியது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தனது கலாச்சாரப் பெருமைகளை முனைப்புடன் முன்னிறுத்தின.
உண்மையில், காஷ்மீரத்தை பாகிஸ்தானும், அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவும் சொந்தம் கொண்டாட முயல்கின்றன. இச்சூழலில், இவ்விரண்டு மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டங்களும் ஆழ்புலக் கட்டுறுதியை சர்வதேச நாடுகளுக்கு குறிப்புணர்த்திவிட்டன.
குறிப்பாக, இந்திய சுற்றுலாத் துறையின் நோக்கம் அயல் நாடுகளுக்கான விளம்பர செலவின்றி நிறைவேறியது. இது தவிர ஜி20 ஆலோசனைக் கூட்டங்களால் இந்தியாவுக்குக் கிடைத்தது என்ன? உலகுக்கு கிடைத்தது என்ன? எனவும் பார்க்க வேண்டி உள்ளது.
இன்று உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கி வருகின்றன. உலகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா. உலக இளம்பருவத்தினர் அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது. இது உலகத்தின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் நம் நாடு ஜெர்மனி, ஜப்பானை பின்னுக்கு தள்ளி, உலகின் மூன்றாவது பொருளாதார நாடாகி வளரும். இதுபோல், வரலாற்றின் பக்கங்களில் இந்தியா பலவித பட்டங்களை தாங்கி நகர்ந்து உள்ளது.
ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ’ஏழை நாடு’ என்ற பதாகையை தாங்கி நின்றது. பின்னர் பசுமைப் புரட்சி, பொருள் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சி இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலுக்கு உயர்த்தியது.
உலகின் வளர்ந்த நாடுகள் பொருளாதார மந்த சூழ்நிலையில் தவிக்க, இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவுக்கு இணையாக வளர்ந்து கொண்டிருந்த சீனப் பொருளாதாரம் கூட மந்தநிலையை நோக்கி நகர்வது உலக நாடுகளை கலக்கப்படுத்தி உள்ளது.
தற்போது, இருளடைந்த உலகின் பொருளாதார வானில் இந்தியா மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறது. இதனால், இந்தியாவின் அறைகூவலை உலக நாடுகள் ஏற்க தயாராகிவிட்டன. இந்தியாவின் அறைகூவல் தனக்கானது அல்ல வளர்ந்து வரும் நாடுகளுக்குமான ஒட்டுமொத்த குரல். இந்தியா தான் நடந்து வந்த பாதையை மறக்கவில்லை.
அது சந்தித்த சோதனைகளும், போராட்டங்களும் வளரும் நாடுகள் இன்றும் சந்திப்பதை காண்கின்றது. குறிப்பாக சூழ்நிலை பிறழ்வும், உலக வர்த்தக நடைமுறை பேதங்களும் வளரும் நாடுகளாலேயே அதிகம் தாக்குகின்றன. இதை இந்தியா தொடர்ந்து சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறது. புதுடில்லியின் பாரத மண்டபத்தில் நடக்கும் ஜி20 மாநாட்டில் இந்தியா இதை அறைகூவலாகவே விடுக்கும்.
எண்பது சதவிகித உலக பொருளாதாரத்தையும், எழுபத்தைந்து சதவிகித உலக வர்த்தகத்தையும் கொண்டது இந்த ஜி20 அமைப்பு. இந்த அமைப்பு, இந்தியாவின் அறைகூவலை செவிமடுத்து கேட்டே ஆக வேண்டும். ஏனெனில், உலக பொருளாதார மந்த சூழலில் இந்தியா மட்டுமே விடிவெள்ளியாக காட்சியளிக்கிறது.
இத்தகைய காரணங்களுக்காகவே இந்தியா, 'சாம்பியன் ஆப் தி குளோபல் சவுத்' என்ற அடையாளத்தை ஈன்றெடுத்து நிற்கிறது. உலக நலன்களை பேணுகின்ற அதே வேளையில் தன் தேச நலன்களையும் பேணி வளப்பதற்கு இந்த ஜி20 மாநாடு பெரும் வாய்ப்பாக அமையும்.
வெளிநாட்டு முதலீடு, உலகின் தரம் வாய்ந்த தொழில்நுட்பம், உலக உற்பத்தி சங்கிலியின் சிரத்தன்மை ஆகியன இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றிமையாதது. இந்த ஜி20 மாநாடு, இந்தியா இத்தகைய விடயங்களையும் உலக தலைவர்களுடன் விவாதிக்கும் நடைமேடையாக அமையும்.
இந்த ஆண்டின் பல்வேறு ஜி20 ஆலோசனைக் கூட்டங்களுக்கு இடையே முதன்முறையாக இந்தியா, ’ஸ்டார்ட் அப் ஜி20’ என்ற அமைப்பை ஏற்படுத்தி குருகிராமில் நடத்தியது. இந்த நடவடிக்கை இந்தியாவை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லும்.
இந்தியாவில் ஸ்டார்அப் நிறுவனங்கள் பெருமளவில் வளர்ந்துள்ளன. அவற்றில் யுனிகார்ன் எனப்படுபவை மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதுபோல், யுனிகார்ன் எனப்படும் வகை அந்தஸ்தானது, ஒரு பில்லியன் டாலர் வர்த்தகத்தை தாண்டும் ஸ்டார்அப்புகளுக்கு அளிக்கப்படுகிறது.
இத்தகைய சூழலில், நடைபெற்ற, ‘ஸ்டார்அப் 20’ ஆலோசனைக் கூட்டம் அந்நிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஈர்க்கும். இது நம் பாரதத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்லும்.
இது மட்டுமன்றி, இந்தியாவின் ஜி20 ஆலோசனைக் கூட்டங்களில் முதன்முறையாக பல முக்கிய தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டன. பேரிடர்களில் குறைந்த தாக்கம், சிறுதானிய முக்கியத்துவம், சைபர் பாதுகாப்பு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சி உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
இத்தகைய விவாத முன்னெடுப்புகள் நமது தேச நலன்களோடு, உலக நலன் காப்பதிலும் முக்கிய பங்காற்றும். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து இந்தியா, 'ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்' என்ற குறிக்கோளை நோக்கமாகக் கொண்டு ஜி 20 ஆலோசனைக் கூட்டங்களில் செயலாற்றியது.
இது பாரத தேசத்தின் பழம்பெரும் தத்துவமான ’வாசுதேவ குடும்பகம்’ என்ற ஞானத்தின் அடிப்படையில் பெறப்பட்ட நோக்கமாகும். இந்த நோக்கம், செயல்படுத்தப்படும் வேளையில் கவிஞர் பூங்குன்றனாரின் கனவான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது மிக விரைவில் இந்தியாவில் நனவாக்கப்படுவது உறுதி!
- கட்டுரையாளர் இந்திய வெளியுறத்துறையின் தென்னிந்தியக் கிளைச் செயலகத்தின் இயக்குநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT