Published : 09 Sep 2023 11:34 AM
Last Updated : 09 Sep 2023 11:34 AM

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நடைமுறை நிறைவேறியது. இதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே முதல்முறை. இம்மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மாநாட்டுக்கு வந்த உலகத் தலைவர்களைப் பிரதமர் மோடி வரவேற்று அரங்குக்கு அழைத்துச் சென்றார்.

தொடர்ந்து மாநாட்டில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் நிரந்த உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியனை இணைக்கும் நிகழ்வு நடந்தது. ஆப்பிரிக்க யூனியனில் 55 நாடுகள் உள்ளன. இந்நிலையில் ஆப்பிரிக்க யூனியனை இணைத்ததால் ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்தபடியாக ஜி-20 கூட்டமைப்பு மிகப் பெரிய அமைப்பாக உருவாகியுள்ளது.

முன்னதாக ஜி-20 மாநாட்டுக்கு வருகைதந்த ஆப்பிரிக்க யூனியனின் பிரதிநிதியை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவி பாரத் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றது கவனம் பெற்றது.

மாநாடு தொடங்கியவுடன் மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கை முன்னர் பாரத் என்று பெயர்ப் பலகை இருந்தது கவனம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x