Published : 09 Sep 2023 06:43 AM
Last Updated : 09 Sep 2023 06:43 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலா ஒரு தொகுதியை கைப்பற்றின.
திரிபுராவின் போக்ஸாநகர் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர் தபாஜ்ஜல் ஹூசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் மிசான் ஹூசைனுக்கு 3,909 வாக்குகள் கிடைத்தன. திரிபுராவின் தன்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 30,017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் கவுசிக் சந்தா 11,146 வாக்கு பெற்றார்.
உ.பி.யின் கோசி பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக தாரா சிங் சவுகான் இருந்தார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தாராசிங் சவுகான் மீண்டும் போட்டியிட்டார். சமாஜ்வாதி சார்பில் சுதாகர் சிங் களமிறங்கினார். பகுஜன் போட்டியிடவில்லை.
வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதி வேட்பாளர் சுதாகர் சிங் 1,24,427 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானுக்கு 81,668 வாக்குகள் கிடைத்தன.
உத்தராகண்டில் பாகேஷ்வர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ் 33,247 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமாருக்கு 30,842 வாக்குகள் கிடைத்தன.
மேற்குவங்கத்தின் துப்குரி பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தபாசி ராய் முன்னிறுத்தப்பட்டார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நிர்மல் சந்திர ராய் போட்டியிட்டார். மார்க்சிஸ்ட் சார்பில் ஈஸ்வர் சந்திர ராய் வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
மும்முனை போட்டி நிலவிய சூழலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் தபாசி ராய் 93,304 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஈஸ்வருக்கு 13,758 வாக்குகள் கிடைத்தன.
ஜார்க்கண்டின் டும்ரி சட்டப்பேரவைத் தொகுதியின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளராக பேபி தேவி 1,00,317 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யு வேட்பாளர் யசோதா தேவிக்கு 83,164 வாக்குகள் கிடைத்தன.
கேரளாவின் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி அண்மையில் உயிரிழந்தார். அவரது மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து ஆளும் மார்க்சிஸ்ட் சார்பில் ஜெய்க் சி தாமஸ் போட்டியிட்டார். பாஜக சார்பில் லிஜின் லால் களமிறங்கினார்.
காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க் சி தாமஸுக்கு 42,425 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,558 வாக்குகளைப் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT