Published : 08 Sep 2023 07:27 PM
Last Updated : 08 Sep 2023 07:27 PM

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு ஒரு புதிய பாதையை வகுக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புதுடெல்லி ஜி20 உச்சிமாநாடு ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதை அடுத்து, அந்த அமைப்பு சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவாக ஜி20 உச்சிமாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, மொரிஷீயஸ் பிரதமர் குமார் ஜெகந்நாத் உள்ளிட்டோர் புதுடெல்லி வந்துள்ளனர். தலைநகருக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுத் தலைவர்களை மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜி20 உச்சிமாநாடு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2023 செப்டம்பர் 09-10 தேதிகளில் புதுடெல்லியின் புகழ்பெற்ற பாரத மண்டபத்தில் 18 வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. இந்தியா நடத்தும் முதல் ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். அடுத்த இரண்டு நாட்களில் உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எதிர்பார்க்கிறேன். புதுடெல்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது என் உறுதியான நம்பிக்கை.

உலகம் ஒரே குடும்பம் என்பதே நமது கலாச்சாரத்தில் வேரூன்றிய ஆழமான நெறிமுறை. அதுவே இந்தியாவின் G20 தலைமையின் கருப்பொருள். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற சிந்தனை, உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற நமது உலகக் கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வரிசையில் நிற்கும் கடைசி நபருக்கு சேவை செய்யும் காந்திஜியின் பணியைப் பின்பற்றுவது முக்கியம்.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், லட்சியமிக்கதாகவும், தீர்க்கமானதாகவும், உலகளாவிய தெற்கின் வளர்ச்சி, கவலைகளுக்கு தீவிரமாக குரல் கொடுக்கும் செயல் சார்ந்ததாகவும் உள்ளது. அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே மகாத்மா காந்தியின் நோக்கம். முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான மனித நேயத்தை மையமாகக் கொண்ட வழிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

வலுவான, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய, சீரான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்பட உலக சமூகத்திற்கு முக்கிய அக்கறை கொண்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் நடைபெற உள்ள 'ஒரே பூமி', 'ஒரே குடும்பம்' மற்றும் 'ஒரே எதிர்காலம்' குறித்த அமர்வுகளுக்குத் தலைமை தாங்க உள்ளேன். நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்காக பல தலைவர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடைபெற உள்ளன.

குடியரசுத்தலைவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தலைவர்களுக்கு இரவு விருந்து அளிப்பார் என்று பிரதமர் மேலும் கூறினார். செப்டம்பர் 10 அன்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். அதே நாளில் நிறைவு விழாவில், ஜி 20 தலைவர்கள் ஆரோக்கியமான 'ஒரே பூமி' க்கான 'ஒரே குடும்பம்' போன்ற நிலையான மற்றும் சமத்துவமான 'ஒரே எதிர்காலத்திற்கான' தங்கள் கூட்டு பார்வையை பகிர்ந்து கொள்வார்கள்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x