Published : 08 Sep 2023 02:08 PM
Last Updated : 08 Sep 2023 02:08 PM
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில், மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித் ஷா சம்மதித்துள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கலைவர் ஹெச்டி தேவ கவுடா பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது எடியூரப்பா அதை உறுதிப்படுத்தியுள்ளார். மாண்டியா, ஹசன், பெங்களூர (ஊரகம்) மற்றும் சிக்பல்லாபூர் ஆகிய நான்கு இடங்களை ஜெடிஎஸ் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகளில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது ஹசன் தொகுதியைத் தவிர மற்ற மூன்று இடங்களில் பாஜகவே வெற்றி பெற்றிருந்தது.
தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும் ஆட்சியில் இருந்த பாஜக அங்கு கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து 28 எதிர்க்கட்சிகள்பாஜகவுக்கு எதிராக இண்டியா என்ற கூட்டணியின் கீழ் ஒன்றிணைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் இந்தக் கூட்டணி பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் இண்டியா அல்லது என்டிஏ இரண்டுடனும் கூட்டணி வைக்காது என்றும், 2024 தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாகவும் தேவ கவுடா தெரிவித்த சில நாட்களுக்குள் இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸின் கூட்டாளியாக இருந்த போதிலும் பெங்களூருவில் நடந்த இண்டியா கூட்டணித் தலைவர்களின் இரண்டாவது சந்திப்புக் கூட்டத்துக்கு தேவ கவுடா அழைக்கப்படவில்லை. அப்போது "சில (கர்நாடகா) காங்கிரஸ் தலைவர்கள் என்னை விரும்பவில்லை. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எனது நல்ல நண்பர். ஆனாலும் காங்கிரஸ் தலைவர்கள் என்னை விரும்பவில்லை, அதனால் நான் புறக்கணிக்கிறேன்" என்று தேவ கவுடா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, கூட்டணி குறித்து முடிவெடுக்க புதன்கிழமை தேவ கவுடா இல்லத்தில் வைத்து நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பெரும்பாலானவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT