Published : 08 Sep 2023 05:49 AM
Last Updated : 08 Sep 2023 05:49 AM
புதுடெல்லி: ஜி20 அமைப்பின் 18-வதுஉச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது முக்கியமானது, வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் இந்தியாவுக்கு பொன்னானதருணம். உலக நன்மைக்காக இதில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்பது ஜி 20 உச்சி மாநாட்டின் முழக்கமாக உள்ளது.
பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சி மீது பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். இது போருக்கான காலம் அல்ல என அவர் கூறினார். அவரது எண்ணங்கள் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இந்த ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் உலக நாடுகள் பயன் அடையும். பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக நாடு முன்னணியில் உள்ளது.
இந்தியா கூறுவதை உலகநாடுகள் கேட்கின்றன. கரோனா காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் இதரதேவையான மருந்துகள் பல நாடுகளுக்கு அனுப்பியதன் மூலம் உலகளவில் முக்கியமான பொறுப்பை இந்தியா நிறைவேற்றிள்ளது.
இவ்வாறு அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
பைடன் மனைவிக்கு கரோனா: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கஅமெரிக்க அதிபர் ஜோ பைடன்இந்தியா புறப்படும் நேரத்தில் அவரது மனைவி ஜில் பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 3 நாட்களாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின்பு, அவர் இந்தியா புறப்பட தயாரானார்.
இது குறித்து வெள்ளை மாளிகைஊடகப் பிரிவு செயலாளர் கரைன்ஜேன் பியர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிபர் பைடனின் பயண திட்டத்தில் மாற்றம் இல்லை. அதிபர் மற்றும் அவருடன் செல்லும் குழுவினருக்கு அடிக்கடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்தியா பயணத்துக்கு முன்பாக அதிபர் பைடனுக்கு மேலும் ஒரு முறை பரிசோதனை செய்யப்படும்.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் அதிபர் பைடன் ஆர்வமாக உள்ளார். வளரும் நாடுகளுக்கு பொருளாதார வாய்ப்புகளை அளிப்பதில் அதிபர் பைடன் கவனம் செலுத்தவுள்ளார். டெல்லி சென்றதும், அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடான சந்திப்பின் போது, கரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
இவ்வாறு ஜேன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT