Published : 08 Sep 2023 04:26 AM
Last Updated : 08 Sep 2023 04:26 AM

ஜி20: இந்திய எரிசக்தி கண்ணோட்டம்

ஜி20 நாடுகளின் தலைவர்கள் வரும் 9,10 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் சந்திக்கிறார்கள். அதில், பருவநிலை மாற்றப் பிரச்சனையை சமாளிக்க எரிசக்தி துறையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது முக்கிய விவாதப்பொருளாக இருக்கும். பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள உடனடி அபாயத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். இதே போல புதைபடிம எரிபொருளில் இருந்து மாற்று எரிபொருளுக்கு மாறுவதன் அவசியத்தையும் ஜி20 நாடுகள் உணர்ந்துள்ளன. உலக வெப்பநிலை அதிகரிப்பு, கரியமில வாயு உமிழ்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மாற்று எரிபொருட்களுக்கு மாறுவது அவசியமாகும்.

உலகிலேயே இந்தியா மிகக்குறைவான அளவுக்கு உமிழ்வை வெளியிடும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. நமது தனிநபர் உமிழ்வு 2.40 tCO2e (டன் கரியமில வாயுவுக்கு சமமானது). உலகளவில் இது சராசரியாக 6.3 tCO2e உள்ளது. உலகின் 17 சதவீத மக்கள்தொகையைக் கொண்ட நாம் நான்கு சதவீதம் அளவுக்கே கரியமில வாயு உமிழ்வை வெளியிடுகிறோம். இந்த அளவுக்கு மிகக்குறைவான உமிழ்வை வெளியிடும் பெரிய பொருளாதார நாடாக நமது நாடு உள்ளது.

சிஓபி 21 பாரீஸ் மாநாட்டில், 2030-ம் ஆண்டுக்குள் புதைப்படிமமற்ற மின்சார உற்பத்தித் திறனை 40 சதவீதம் அளவுக்கு எட்ட நாம் உறுதியளித்தோம். இலக்கு நிர்ணயித்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அதாவது 2021-ம் ஆண்டிலேயே நாம் இதனை எட்டினோம். நமது புதைபடிமமற்ற மின்சார உற்பத்தித் திறன் 187 ஜிகாவாட் ஆகும். சிஓபி26 கிளாஸ்கோ மாநாட்டில், 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீத புதைபடிமமற்ற மின்சார உற்பத்தி திறனை அடைவோம் என்பது நமது புதிய உறுதிப்பாடாக அமைந்தது.

முன்னணியில் எரிசக்தி செயல்திறன்: எரிசக்தி செயல்திறன் முன்முயற்சிகளில் நாம் முன்னணியில் உள்ளோம். தொழில்துறை சார்ந்த நமது நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 106 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வை நாம் குறைத்துள்ளோம். இதனை நமது எல்இடி திட்டம் மூலம் சாதித்துள்ளோம்.

நீடித்த வளர்ச்சி இலக்குகளில் எரிசக்தி பயன்பாடு மையப்புள்ளியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 18 மாதங்களில் 2.6 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதன் மூலம், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்வசதியை விரிவாக்கியுள்ளோம். கடந்த 9 ஆண்டுகளில் நமது மின்சார உற்பத்தித் திறனை 190 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளோம். 1,97,000 சர்கியூட் கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் எடுத்துச்செல்லும் கட்டமைப்பை நிறுவி, உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் தொகுப்பை உருவாக்கியுள்ளோம். இந்த வகையில் நாம் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளோம்.

தொடர்ச்சியான, தூய்மையான மின்சார உற்பத்தியை அணுசக்தி வழங்குகிறது. இருப்பினும், நம்மைத் தவிர வளர்ந்துவரும் நாடுகள்பலவற்றில் அணுசக்தித்துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றன. சிறிய மாதிரி அணுஉலைகள் இதற்கு தீர்வாக இருக்கக்கூடும். ஆனால் அது இன்னும் தயாரிப்பு கட்டத்திலேயே உள்ளது.

100 ஜிகாவாட் உற்பத்தித் திறன்: விநியோகச் சங்கிலிகளை பன்முகப்படுத்து வதில் மற்றொரு சவால் அமைந்துள்ளது. தற்போது, சூரிய மின்கலம் மற்றும் தொகுதி உற்பத்தி திறனில் கணிசமானப் பகுதி ஒரேநாட்டில் குவிந்துள்ளது. பெரிய அளவிலான உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பி.எல்.ஐ) நாம் செயல்படுத்தி வருகிறோம். 2026-ம்ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் உற்பத்தித் திறனை அடையும் பாதையில் நாம் உள்ளோம். அதேபோல், மின்சார சேமிப்புக்கான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி திறனில் பெருமளவு ஒரே நாட்டில் குவிந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, நமது எல்லைகளுக்குள் லித்தியம் படிமங்களை நாம் கண்டறிந்துள்ளோம். லித்தியம் பேட்டரி உற்பத்திக்கான ஒரு வெற்றிகரமான பி.எல்.ஐ டெண்டரை நாம் பெற்றுள்ளோம்.

கோவாவில் எனது தலைமையில் நடைபெற்ற ஜி-20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில், எரிசக்தி மாற்றத்தில் உள்ள தடங்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முந்தைய ஜி-20 மாநாட்டை விட தற்போது அதிகமான விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். எரிசக்தி மாற்றத்தை மேற்கொள்ளும் போது, அதன் அணுக்கத்தின் முக்கியத்துவம் ஏற்றுகொள்ளப்பட்டது. உலகளவில் 773 மில்லியன் மக்களுக்கு எரிசக்தி அணுகல் கிடைக்காத வரை எரிசக்தி மாற்றத்தை முழுமையானதாகக் கருத முடியாது என்பதை நாங்கள் அங்கீகரித்தோம்.

எரிசக்தி மாற்ற முயற்சிகளுடன் எரிசக்தி பாதுகாப்பு, அணுகல், குறைந்த செலவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் கூட்டாக அங்கீகரித்தோம். பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் அதன் வெப்பநிலை இலக்கை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,

உலகளாவிய எரிசக்தி செயல்திறன் மேம்பாட்டிற்கான விகிதத்தை இரட்டிப்பாக்குவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் உறுதிபூண்டனர், மேலும் இந்திய தலைமைத்துவத்தால் தயாரிக்கப்பட்ட, உலகளாவிய எரிசக்தி செயல்திறன் மேம்பாட்டு விகிதத்தை 2030-க்குள் இரட்டிப்பாக்குவதற்கான செயல் திட்டத்தை அவர்கள் அங்கீகரித்தனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரணங்கள், முக்கிய கனிமங்களுக்கான நம்பகமான, பன்முகப்படுத்தப்பட்ட விநியோக சங்கிலிகளின் தேவையை நாங்கள் வலியுறுத்தினோம். பூஜ்ஜியம் மற்றும் குறைந்த உமிழ்வு தொழில்நுட்பங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், அமோனியா ஆகியவை எதிர்காலத்திற்கான எரிபொருட்களாக அங்கீகரிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் தரத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இந்திய தலைமைத்துவம் அறிமுகப்படுத்திய ஹைட்ரஜன் தொடர்பான ஜி-20 உயர்மட்ட தன்னார்வ கொள்கைகளை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

எரிசக்தி மாற்றத்திற்கான குறைந்த செலவு நிதியை அணுகுவது வளரும் பொருளாதாரங்களுக்கு இன்றியமையாதது. இது கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இந்திய தலைமைத்துவம் தயாரித்த எரிசக்தி மாற்றத்திற்கான குறைந்த செலவு நிதி குறித்த அறிக்கையை அமைச்சர்கள் கவனத்தில் கொண்டனர்.

எரிசக்தி அமைச்சர்களின் இந்த கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. இந்தக் கூட்டத்தை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு ஒருமித்தக் குரலில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எரிசக்தி மாற்றத்தில் இந்தியா ஒரு முன்னணி நாடாகவும், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் குரலாகவும் உருவெடுத்துள்ளது என்பது நமக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.

ஆர்.கே.சிங் - மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x